வறட்சியால் கேரளம், கர்நாடகத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் தென்னை மட்டைகள்: விலையும் கடும் உயர்வு

பொள்ளாச்சி பகுதியில் நிலவிய கடும் வறட்சியால் தொழிற்சாலைகளுக்குத் தென்னை மட்டைகள் கிடைக்காததால் முதன்
Updated on
1 min read

பொள்ளாச்சி பகுதியில் நிலவிய கடும் வறட்சியால் தொழிற்சாலைகளுக்குத் தென்னை மட்டைகள் கிடைக்காததால் முதன் முறையாக, கேரளம் மற்றும் கர்நாடகத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு அவை கொண்டு வரப்படுகின்றன.

  தென்னை நகரான பொள்ளாச்சி பகுதியில் சுமார் 1 கோடி தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழைகள் பொய்த்துவிட்டன. இதனால், பொள்ளாச்சி பகுதியில் மட்டும் சுமார் 30 சதவீத தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. சுமார் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட மரங்கள் காய்க்கும் திறனை இழந்துவிட்டன.

  பொள்ளாச்சி பகுதியில் சில ஆண்டுகளாக தென்னை மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நார் மற்றும் நார்க்கழிவுத் துகள் கட்டிகளின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இப் பகுதியில் மட்டும் தென்னை மட்டைகளை மூலப்பொருளாகக் கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சராசரியாக ஒரு தொழிற்சாலைக்கு 40 ஆயிரம் மட்டைகள் தினமும் தேவைப்படுகின்றன.

  ஏற்றுமதிக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்ததால் மட்டைகளுக்கான தேவையும் உயர்ந்தது. உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததால் அனைத்து தொழிற்சாலைகளும் முழு அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. தேங்காய் மட்டை ஒன்றின் விலை சுமார் 6 மாதங்களுக்கு முன் 50 பைசாவாக இருந்தது. இப்போது ரூ.1.75 ஆக உயர்ந்துள்ளது.

  பொள்ளாச்சி பகுதி தொழிற்சாலைகளுக்குப் போதுமான மட்டைகள் கிடைக்காததால் முதன் முறையாக கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. தினமும் 20 முதல் 40 லோடுகள் வரை இரு மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுவதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். மூலப்பொருளான தென்னை மட்டை விலை உயர்ந்ததால் சுருள் கயிறு விலை கிலோவுக்கு ரூ.10 வீதம் உயர்ந்துள்ளது.

 தென்னை மட்டைகள் கிடைக்காத நிலை தொடர்ந்தால் பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கேரள மாநில தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருளான தென்னை நார், பொள்ளாச்சி பகுதியில் இருந்து செல்வதால் அங்கிருந்து அதிக அளவில் தென்னை மட்டைகள் பொள்ளாச்சிக்குக் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com