மண்ணுக்குப் பொருந்தாத விவசாயம்: கடன் பெற்ற விவசாயிகளைக் கைவிட்ட தோட்டக்கலைத் துறை

கோவை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், லட்சக்கணக்கில் கடன் பெற்று கொய்மலர் சாகுபடியில்
Updated on
2 min read

கோவை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், லட்சக்கணக்கில் கடன் பெற்று கொய்மலர் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள், அந்தத் திட்டம் தோல்வி அடைந்த நிலையில் தற்போது கடனில் மூழ்கித் தவிக்கின்றனர்.
பருவமழை பொய்த்துப் போனதாலும் காவிரியில் தண்ணீர் விட கர்நாடகம் மறுத்துவிட்டதாலும் தமிழகத்தில் விவசாயிகள் மரணம் தொடர் நிகழ்வாகியுள்ளது. கோவையிலும் அதைப் போலவே பருவமழை கைகொடுக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுத் துறை அதிகாரிகளின் தவறான வழிநடத்தலால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டு, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் ஒரு பகுதியாக பசுமைக் குடில், நிழல் வலைக் குடில் சாகுபடி திட்டம் 2009-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நீர்ப்பாசன வசதி உள்ள, நல்ல மண் வளம் கொண்ட இடங்களில் குடில்கள் அமைத்து வணிக ரீதியாக லாபம் தரும் மலர்கள், காய்கறிகளை சாகுபடி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தந்த மாநில தோட்டக்கலைத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கொய்மலர் சாகுபடி தற்போதும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
இந்த மாவட்டங்களில் கிடைத்த வெற்றியைக் கணக்கில் கொண்டு, கோவை மாவட்டத்தில் மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டங்களில் பல விவசாயிகளை பசுமைக் குடில் திட்டத்தின்கீழ், பயனடையும்படி, 2009-இல் அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.
அதன்படி, நவக்கரை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி, மாரிசெட்டிபதி சாந்தாமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பசுமைக் குடில் திட்டத்தின்கீழ், சேர்ந்துள்ளனர். அவர்களின் தோட்டங்களில் 25 சென்ட் இடத்தில் ரூ.12 லட்சம் செலவில் பசுமைக் குடில் அமைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்காக ரூ. 3 லட்சம் மானியம் வழங்கப்பட்ட நிலையில், புணேயில் இருந்து லில்லியம், ஜெரிப்ரா, காரனேஷன் உள்ளிட்ட செடிகளின் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு குடில்களில் நடவு செய்யப்பட்டன.
செடிகள் வளர்ந்து பூக்கும் தருணம் வரும் வரையிலும், விற்பனைக்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதாக உறுதி அளித்த தோட்டக்கலைத் துறையினர், திடீரென உங்களது உற்பத்தியை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
ஆனால், வெளிமார்க்கெட்டில் போதிய விலை கிடைக்காததாலும், அந்த மலர்களுக்கான தட்பவெப்ப நிலை கோவையில் இல்லாததால் போதிய அளவு சாகுபடி கிடைக்காமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, திட்டம் அடுத்த 3 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அந்தத் திட்டத்துக்காக வாங்கிய கடன் பல லட்சங்களாக உயர்ந்திருப்பதால், பசுமைக் குடில் சாகுபடி விவசாயிகள் செய்வதறியாத நிலையில் உள்ளனர்.
கோவைக்கு உகந்த திட்டம் அல்ல: இதுகுறித்து நவக்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி பி.சக்திவேல் கூறியதாவது: தென்னை சாகுபடி செய்து வந்த என்னை பலமுறை அணுகி கொய் மலர் சாகுபடிக்கு மாறும்படி வலியுறுத்திய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், ஒரு மலருக்கு ரூ.5 முதல் ரூ. 10 வரை விலை கிடைக்கும் என்று கூறினர்.
 ஆனால், தட்பவெப்ப நிலை சரியாக இல்லாததால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்க வேண்டிய மலர்கள் இரண்டே நாளில் வாடுவதும், தேவையான அளவு வளருவதும் தடைபட்டது. இதனால், விலை கிடைக்காமலும், உற்பத்தி இல்லாமலும் மூன்றே ஆண்டுகளில் பசுமைக் குடிலை கிடப்பில் போட்டுவிட்டேன்.
இந்தத் திட்டத்துக்காக வாங்கிய ரூ. 12 லட்சம் கடனில் இதுவரை ரூ. 9.43 லட்சம் கட்டிவிட்ட நிலையில் மேலும் ரூ. 12 லட்சம் கட்ட வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். திட்டத்தை தொடங்கும்படி வலியுறுத்திய அதிகாரிகளோ, இது குறித்து மெளனம் காக்கின்றனர்.
 கொய்மலர் சாகுபடி திட்டம் கோவை காலநிலைக்கு உகந்தது அல்ல என்று வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எனவே, தவறான திட்டத்தால் லட்சக்கணக்கில் நஷ்டமடைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடனை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.
கொள்முதல் மையத்தை மூடிவிட்ட அரசு: இதுகுறித்து நவக்கரை விவசாயி செந்தில் கூறியதாவது:
அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு வாழைத் தோட்டத்தை அழித்து கொய் மலர் சாகுபடி செய்தோம். ஆனால், அந்த மலர்கள் ஒரு ரூபாய்க்கு கூட விற்கவில்லை. எனவே, அதை கோயில்களுக்கு இலவசமாக வழங்கினோம்.
இந்தத் திட்டத்துக்காக உதகையில் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்பட்ட கொள்முதல் மையத்தையும் அரசு மூடிவிட்டது. இப்போது, இத்திட்டத்துக்காக வாங்கிய ரூ.9 லட்சம் கடன், வட்டியுடன் சேர்த்து ரூ.18.50 லட்சமாக உயர்ந்து நிற்கிறது. விவசாய நிலத்தை விற்றால் மட்டுமே கடனை அடைக்க முடியும் என்ற நிலையில், எனது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றார் அவர்.
இழப்பீடு தேவை: இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்குப்பாறை பாலு கூறியதாவது:
ஒரு திட்டம் சரியாக செயல்பட்டால் மட்டுமே அதை விவசாயிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆனால், பசுமைக் குடில் திட்டம் கோவைக்கு சரிவராது என்ற நிலையிலும், அதிகாரிகள் தவறாக வழிநடத்தியதால் பல விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. எனவே, அந்த விவசாயிகளின் கடன்களை அரசு ரத்து செய்வதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்றார்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "பசுமைக் குடிலில் கொய்மலர் சாகுபடி திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டதால் அதை நிறுத்தி வைத்துள்ளோம். அதற்குப் பதிலாக வெள்ளரி சாகுபடியில் ஈடுபடும்படி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். கொய்மலர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விவரங்களைச் சேகரித்து அரசின் கவனத்துக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com