அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு போதிய நிதிஒதுக்கீடு செய்யாமல் நல வாரியத்தை முடக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நல வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள நலவாரிய அலுவலகத்தை சிஐடியூ மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். அலுவலகத்திற்குள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவை நல வாரியத்தில் மட்டும் ரூ. 4 கோடிக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. மாவட்டஆட்சியர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய நலவாரிய ஆலோசனைக் கூட்டம் கடந்த ஒரு வருடமாக கூட்டப்படவில்லை.
இக்கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு நிரந்திர நிதியை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு திட்டமிட்டு நலவாரியத்திற்கு போதிய நிதிஒதுக்கீடு செய்யாமல் முடக்கும் செயல் கண்டிக்கத்தக்கது என வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர், தொழிலாளர் நலத் துறை அதிகாரி மலர்க்கொடி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட அளவில் செய்ய வேண்டிய பணிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், மாநில அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து அரசுக்குத் தெரிவிப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
சிஐடியூ மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட ச் செயலாளர் (பொறுப்பு) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள்ஆர்.வேலுசாமி, ஆர்.பழனிசாமி, பி.கே.சுகுமாறன் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







