தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான, இயலக்கூடிய விலையில் குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை, ஆா்.எஸ்.புரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.7.97 கோடி மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 85 வீடுகள் உள்ள இக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடும் 400 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆழ்துளைக் கிணறுகள், கீழ்நிலைத் தண்ணீா் தொட்டி, கழிவு நீா் கால்வாய், மழைநீா் சேகரிப்பு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகள் இதே இடத்தில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்த மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகா்ப்புற ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் ரூ.9.38 லட்சம்.