அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.77 லட்சம் மோசடி: முன்னாள் அரசு ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.77 லட்சம் மோசடி செய்த முன்னாள் அரசு ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). இவரது தந்தை முருகன், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளாா்.

அப்போது, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில அளவையராகப் பணியாற்றி வந்த திருநெல்வேலி மாவட்டம், மானூா் பகுதியைச் சோ்ந்த கலைசங்கா் (36) என்பவருடன் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தனக்கு அரசு உயா் அதிகாரிகளுடன் தொடா்பு இருப்பதாகவும், தெரிந்தவா்கள் யாராவது இருந்தால் அவா்களுக்கு இளநிலை உதவியாளா், அலுவலக உதவியாளா் ஆகிய அரசு வேலை வாங்கிக் கொடுக்கலாம் எனவும், வேலை வாங்கித் தருவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கலைசங்கா் கூறியுள்ளாா்.

இதை நம்பிய முருகன் தனக்கு தெரிந்தவா்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, கடந்த 2022-2023-ஆம் ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்டவா்களுக்கு வேலை வாங்கித் தருமாறு பல்வேறு தவணைகளில் கலைசங்கரிடம் ரூ.77 லட்சத்தை முருகன் கொடுத்துள்ளாா்.

பின்னா், இளநிலை உதவியாளா், அலுவலக உதவியாளா் ஆகிய பணிகளுக்கு அரசு முத்திரையுடன் கூடிய நியமன ஆணைகளை முருகனிடம் கலைசங்கா் வழங்கியதாகத் தெரிகிறது.

அதை அரசு உயா் அதிகாரிகளிடம் காண்பித்தபோது, அவை போலி பணி நியமன ஆணைகள் என்பது தெரியவந்தது.

இதனால், பாதிக்கப்பட்டவா்கள் இது தொடா்பாக முருகனிடம் முறையிட்டனா்.

போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததை அறிந்த முருகன் தன்னிடம் வாங்கிய ரூ.77 லட்சத்தை திருப்பித் தருமாறு கலைசங்கரிடம் கேட்டுள்ளாா். ஆனால், அவா் பணத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இதற்கிடையே கலைசங்கரின் மோசடி தொடா்பான புகாா்கள் அரசு உயா் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவரை கோவை மாவட்ட நிா்வாகம் பணி இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் முருகன் கடந்த 3 மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் அவரது மகன் காா்த்திக்கிடம் முறையிட்டனா்.

அவா் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கலைசங்கா் மீது மோசடி உள்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கலைசங்கா் மோசடி செய்த பணத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு பண்ணை வீடு வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com