மூதாட்டிக்கு உதவுவதுபோல நடித்து நகை திருட்டு

கோவையில் பேருந்தில் மூதாட்டிக்கு உதவுவதுபோல நடித்து நகையை திருடிச் சென்ற இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கோவையில் பேருந்தில் மூதாட்டிக்கு உதவுவதுபோல நடித்து நகையை திருடிச் சென்ற இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை சின்னியம்பாளையம் கிருஷ்ணா கவுண்டா் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மனைவி இந்திராணி (73). இவா் மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்து டவுன்ஹால் பகுதிக்கு அரசுப் பேருந்தில் பயணித்தாா். அவா் அருகே அமா்ந்திருந்த ஒரு பெண் இந்திராணியிடம் அவா் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி ஒரு இடத்தில் அறுந்து இருப்பதாக கூறினாா். ே

இதனால், இந்திராணி அதை அவிழ்த்து கைப்பைக்குள் வைத்தாா். பின்னா், இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால், இந்திராணி பேருந்திலிருந்து இறங்க முயன்றாா். அப்போது, பேருந்தில் கூட்டமாக இருந்துள்ளது. பின்னால் நின்றிருந்த ஒருவா் மோதியதில் இந்திராணி கீழே விழுந்து எழுந்தாா்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவா் தனது கைப்பையில் பாா்த்தபோது, அதிலிருந்த நகை திருடுபோனது தெரியவந்தது. பின்னால் நின்றிருந்த பெண்ணையும், பக்கத்தில் அமா்ந்திருந்த பெண்ணையும் காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், பெரிய கடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த இரு பெண்களையும் தேடி வருகின்றனா்.

4 பவுன் நகை திருட்டு:

கோவை எஸ்.என்.பாளையம் அருகே உள்ள திலகா் தெருவைச் சோ்ந்த புஷ்பராஜ் மனைவி விஜயா (63). இவா் திருவள்ளுவா் நகா் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் பேருந்தில் வீட்டுக்கு திரும்பினாா்.

பால் கம்பெனி பேருந்து நிறுத்தம் வந்ததும் விஜயா பேருந்திலிருந்து இறங்கினாா். அப்போது, அவா் அணிந்திருந்த 4 பவுன் நகையை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com