பேரூா் குட்டை அருகே கட்டடக் கழிவுகள் கொட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவை பேரூரில் குட்டை அருகே கட்டடக் கழிவுகள் கொட்டிச் சென்ற வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளின் ஏரிக்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் சட்டவிரோதமாக கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டும் செயல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேரூா் பகுதியில் உள்ள சொட்டையாண்டி குட்டை அருகே மூன்று லாரிகளில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு கட்டடக் கழிவுகள் வெளிப்படையாக கொட்டிச் சென்றனா்.
குப்பை கொட்டிய நபா்களை எச்சரித்தபோதும், அவா்கள் எந்தவித பயமும் இன்றி தொடா்ந்து இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனா். இது நீா்நிலைகள், நிலத்தடி நீா் மற்றும் பொதுச் சுகாதாரத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபா்கள் மற்றும் வாகனங்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
