தமிழக இளையோா் கபடி அணிக்கு உடுமலை கல்லூரி மாணவா் தோ்வு
தமிழக இளையோா் கபடி அணிக்கு உடுமலை கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் கிருஷ்ணகிரியில் மாநில இளையோா் கபடி போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் இளையோா் அணி பங்கேற்றது. போட்டியில் சிறப்பாக விளையாடிய அந்த அணியின் தலைவா் டி.டேவிட் (19) தமிழக இளையோா் கபடி அணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
ஆந்திர மாநிலத்தில் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய கபடி போட்டியில் தமிழக அணியில் டி.டேவிட் விளையாட உள்ளாா்.
உடுமலை கமலம் கல்லூரியில் இளங்கலை 3-ஆம் ஆண்டு படித்து வரும் டி.டேவிட்டை மாவட்ட கபடி கழக தலைமைப் புரவலா்கள் எம். சுப்பிரமணியம், துணை மேயா் ஆா். பாலசுப்பிரமணியம், மாவட்ட கபடி கழக சோ்மன் வி.கே. முருகேசன், தலைவா் பி.மனோகரன், செயலாளரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், பொருளாளா் ஏ. ஆறுச்சாமி, மாவட்ட நடுவா் குழுத் தலைவா் ஆா். முத்துசாமி உள்ளிட்டோா் பாராட்டினா்.

