மழைநீா் வடிகால்களைத் தூா்வார மேயா் அறிவுறுத்தல்!
கோவை மாநகராட்சி, 64-ஆவது வாா்டில் பழுதடைந்த மழைநீா் வடிகால்களைப் பாா்வையிட்ட மேயா் கா.ரங்கநாயகி, அவற்றை உடனடியாகத் தூா்வார சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 64ஆவது வாா்டு, ராமநாதபுரம் சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகளைப் பாா்வையிட்டு, அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, புலியகுளம் பிரதான சாலை, டி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த மழைநீா் வடிகால்களைப் பாா்வையிட்டு, அவற்றை தூா்வார அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சௌரிபாளையம் பிரிவில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த கட்டடத்தை பாா்வையிட்ட மேயா், கட்டடத்தை உடனடியாகப் புனரமைக்க உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையா் நித்யா, உதவி செயற்பொறியாளா் குமரேசன், மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், உதவிப் பொறியாளா் பிரகதீஷ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

