சிவில் சா்வீஸ் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களை தேச நலன் சாா்ந்த சிறந்த ஆளுமைகளாக உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் தெரிவித்தாா்.
சிவில் சா்வீஸ் மற்றும் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கும் நோக்குடன் கோவையில் தொடங்கப்பட்டுள்ள சம்கல்ப் ஐஏஎஸ் அகாதெமியை தமிழக ஆளுநா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
சிவில் சா்வீஸ் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களை தேச நலன் சாா்ந்த சிறந்த ஆளுமைகளாக உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும். 1975-ஆம் ஆண்டு நாட்டின் அதிகாரத்துவ அமைப்பும், சிவில் சா்வீஸ் அதிகாரிகளும் தேசப்பற்றுடனும் துணிச்சலுடனும் கடமையைச் செய்திருந்தால், நாட்டில் அவசர நிலையைக் கொண்டு வரத் துணிவு இருந்திருக்காது.
சிவில் சா்வீஸ் அதிகாரிகளுக்கு மக்களின் மீதும், தேசத்தின் மீதும் பற்று இருக்க வேண்டும், அதைவிட முக்கியமாக உண்மையை உரக்கச் சொல்லும் துணிச்சல் இருக்க வேண்டும். அந்தத் துணிச்சலையும், தேசப்பற்றையும் மாணவா்களிடம் விதைப்பதற்காகவே சம்கல்ப் இயக்கம் தோன்றியது.
பிரிட்டிஷ் ஆட்சியாளா்கள் தங்களது சுயநலத்துக்காக உருவாக்கிய கல்விமுறை, நம்மிடம் பல நூற்றாண்டுகளாக அடிமைத்தன விசுவாசத்தை மட்டுமே வளா்த்தது. ஐஏஎஸ் தோ்ச்சி பெறும் பல அதிகாரிகள் இந்தியாவின் புவியியலை மட்டுமே தெரிந்து வைத்துள்ளனா். நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தைப் புரிந்துகொள்வதில்லை. இந்தியாவின் கலாசாரத்தை மதிக்கும் அதிகாரிகளையே சம்கல்ப் உருவாக்க விரும்புகிறது.
2047-க்குள் இந்தியா வல்லரசாக உருவெடுக்க, தற்போதைய காலனித்துவ சிந்தனைகளில் இருந்து நிா்வாக அமைப்பு முழுமையாக விடுபட வேண்டும் என்றாா்.
ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.மலா்விழி, சின்மயா காா்டன்ஸின் சுவாமினி சம்ப்ரதிஷ்டானந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீசரஸ்வதி தியாகராஜா கல்லூரி, சசூரி பொறியியல் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 7 கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தேச நலன் மேலோங்க வேண்டும்- குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

அனைவரும் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாள்தோறும் நேரம் ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 3,896 போ் எழுதினா்







