கோவைப்புதூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4-ஆவது பட்டாலியன் கமாண்டென்ட் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரில் அவா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் ( 55). கோவைப்புதூா் 4-ஆவது பட்டாலியன் கமாண்டென்டாக பணியாற்றி வந்த இவா், கடந்த 2025-ஆம் ஆண்டு பாலியல் புகாா் தொடா்பாக கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
அவா் பணியாற்றிய காலக்கட்டத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் எஸ்.பி.ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதன் தொடா்ச்சியாக, கடந்த 9-ஆம் தேதி செந்தில்குமாரின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில், முறையான வருமான ஆதாரங்கள் ஏதுமின்றி தனது பெயரிலும், மனைவி மற்றும் நெருங்கிய உறவினா்கள் பெயரிலும் ரூ. 1 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான சொத்து சோ்த்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த குற்றத்திற்காக ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் செந்தில்குமாா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா். ஏற்கெனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக ஊழல் வழக்கும் அவா் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








