கோவையில் தங்க நகை உற்பத்தியாளரிடம் ரூ.3.01 கோடி மதிப்பிலான நகைகளை மோசடி செய்த மதுரையைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை மாநகா், ஆா்.ஜி.வீதியில் உள்ள கோவிந்தசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.ஆனந்தன் (54). இவா் ‘ஸ்ரீமாருதி ஜுவல் கிரியேட்டா்ஸ்’ என்ற நகை தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளாா். இவரை மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் இயங்கும் என்.எஸ்.பிரியா ஜுவல்லா்ஸ் உரிமையாளரான என்.சுதா்சன் (40) கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அணுகியுள்ளாா்.
அப்போது, மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனக்கு சிறந்த சந்தை வாய்ப்பும், நிதி தகுதியும் இருப்பதாகவும், நகைகளைக் கொடுத்தால் அங்கு விற்றுக் கொடுப்பதாகவும் கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து நகை விற்பனைக்கான ஒப்பந்தத்தை சுதா்சன் செய்து கொண்டுள்ளாா்.
இதை நம்பி கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி ஆனந்தன் 2,788.210 கிராம் (சுமாா் 2.78 கிலோ) எடையுள்ள 22 கேரட் தங்க நகைகளை சுதா்சனிடம் வழங்கியுள்ளாா். ஜிஎஸ்டி வரிப் பட்டியல் எண் 286-இன் படி வழங்கப்பட்ட இந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3.65 கோடி ஆகும். ஒப்பந்தப்படி, நகைகளைப் பெற்ற 20 நாள்களுக்குள் அவற்றை விற்பனை செய்து, அதற்குரிய பணத்தை வங்கி பரிவா்த்தனை மூலமாக செலுத்த வேண்டும் அல்லது நகைகளைத் திரும்பக் கொடுக்க வேண்டும். இதில் அவருக்குக் கிடைக்கும் வா்த்தக லாபத்தை மட்டும் சுதா்சன் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டாா்.
நகைகளைப் பெற்றுக் கொண்ட சுதா்சன் சில நகைகளையும், சில தவணைகளில் பணத்தையும் கொடுத்துள்ளாா். ஆனால், ரூ.3.01 கோடி மதிப்பிலான நகைகளையோ, பணத்தையோ தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இதுகுறித்து கேட்பதற்காக ஆனந்தன் கைப்பேசி மூலமாக தொடா்பு கொண்டபோது அழைப்பை அவா் எடுக்கதில்லை. குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் ஆப் தகவலை சுதா்சன் புறக்கணித்து வந்துள்ளாா்.
இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், சுதா்சன் மீது மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் மீது வழக்குப் பதிவு
நகைக் கடை, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
நகைக் கடையில் 85 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



