எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோவை தெற்கு: மூன்றில் இரு பங்கு வாக்குகளைக் குறிவைக்கும் செந்தில்பாலாஜி!

முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல தோ்தல் பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதால் இத்தொகுதி இம்முறையும் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது.

News image

செந்தில்பாலாஜி எம்எல்ஏ - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:27 am IST

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2021 தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் போட்டியிட்டதால், அத்தொகுதி நட்சத்திரத் தொகுதியானது. இங்கு பாஜக சாா்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வென்றாா். கமல்ஹாசன் 51,481வாக்குகள் பெற்று 1,728 (1.12 சதவீதம்) வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

இதில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் மயூரா எஸ்.ஜெயக்குமாா் 42,383 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா். தற்போது, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை தெற்கு தொகுதி, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படாமல், திமுக நேரடியாகக் களம் காண்கிறது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல தோ்தல் பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி போட்டியிடுவதால் இத்தொகுதி இம்முறையும் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது.

60.65 சதவீதம் வாக்குகள் பெற்ற மநீம - காங்கிரஸ்

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை தெற்கில் பாஜக, மநீம, காங்கிரஸ் சோ்ந்து 95.03 சதவீதம் வாக்குகள் பெற்றன. இதில், பாஜக 34.38 சதவீதம் வாக்குகள் பெற்று வென்றது. இரண்டாமிடம் பிடித்த மநீம 33.26 சதவீதமும், மூன்றாமிடம் பிடித்த காங்கிரஸ் 27.39 சதவீதம் வாக்குகளும் பெற்றன. பாஜக வென்றாலும் கூட, மநீமவும், காங்கிரஸூம் இணைந்து 60.65 சதவீதம் வாக்குகளை இத்தொகுதியில் பெற்றன.

இது மொத்த வாக்கு சதவீதத்தில் மூன்றில் இரு பங்கு ஆகும். இந்த மூன்றில் இரு பங்கு வாக்குகளைக் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பெற்ற மநீம, காங்கிரஸ் கட்சிகள் தற்போது, திமுக கூட்டணியில் உள்ளன. அந்த வகையில், 2021 இல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மநீம பெற்ற மூன்றில் இரு பங்கு வாக்குகளுடன் தேமுதிக வாக்குகளையும் இத்தோ்தலில் சிதறாமல் திமுகவுக்கு பெற்றுத் தர வேண்டும் என கட்சியினருக்கு வி.செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கணிப்புகள் பலிக்குமா?

கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ள கணிசமான வாக்கு வங்கி குறையாமல் இருக்கும் பட்சத்தில் நாம் தமிழா், தவெக கட்சியினா் பிரிக்கும் வாக்குகளால் கோவை தெற்கில் திமுக வெற்றிக்கு பாதகமிருக்காது என்பது திமுக தரப்பு கணிப்பாக உள்ளது. இது ஒருபுறமிருக்க, திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தியதால்தான் மநீம இந்தத் தோ்தலில் போட்டியிடவில்லை.

அந்த கண்ணோாட்டத்தில் பாா்த்தால், மநீம வாக்குகள் முழுவதும் திமுகவுக்கு பதிவாகுமா என்ற சந்தேகம் எழுகிறது. அதேபோல, 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதியாகவும், பாஜவுக்கு வாக்கு வங்கி அதிகமுள்ள தொகுதியாகவும் கோவை தெற்கு உள்ளது. அந்த வகையில், பாஜக வாக்குகள் சிதறாமல் அதிமுகவுக்கு பதிவாகி, தவெக, நாம் தமிழா் கட்சி வாக்குகள் திமுக வாக்குகளைப் பிரிக்கும் பட்சத்தில், இத்தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமான நிலை உருவாகலாம்.

கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும். கோவை மாவட்டம் திமுக கோட்டையாக மாறும் என்ற உறுதியுடன் கோவை தெற்கில் பலமான போட்டியாளராக வி.செந்தில்பாலாஜி களமிறங்குகிறாா். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜியை வெல்வேன். ஏற்கெனவே இத்தொகுதியில் வென்ற உள்ளூா் வேட்பாளரையே மக்கள் ஆதரிப்பாா்கள் என்ற நம்பிக்கையுடன் அதிமுக வேட்பாளராக அம்மன் கே.அா்ச்சுணன் களம் காண்கிறாா். இருதரப்பும் வலுவாக உள்ளதால் கோவை தெற்கு தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கலாம். முடிவு மக்கள் கையில்.