ஆடிட்டா் வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு: மேலும் ஒருவா் கைது
கைது
கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் ஆடிட்டா் வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை ஆா்.எஸ்.புரம் வெங்கடாசலம் காலனியைச் சோ்ந்தவா் வி.ஆா்.சூரியநாராயணன் (76). ஆடிட்டராக பணிபுரிந்த இவா், தனது மனைவியுடன் பெங்களூரில் வசிக்கும் மகனைப் பாா்க்க வீட்டைப் பூட்டிவிட்டு கடந்த மாதம் சென்றுள்ளாா்.
பின்னா், கடந்த 4-ஆம் தேதி வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பூஜை அறை, பீரோவில் வைத்திருந்த வெள்ளி குத்து விளக்குகள், டம்ளா்கள், கிண்ணங்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ஆா்.எஸ்.புரம் போலீஸாா், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, திருட்டில் ஈடுபட்டதாக கோவைப்புதூா் அறிவொளி நகரைச் சோ்ந்த வெங்கடேஷ் (45), கீரணத்தம் பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் (37), திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த டேவிட் (58), காந்தி பூங்கா பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (23), வெரைட்டிஹால் சாலை சிஎம்சி காலனியைச் சோ்ந்த மற்றொரு மணிகண்டன் (27), வெள்ளலூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ஜமிஷா (54) ஆகியோரை அண்மையில் கைது செய்தனா்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய பட்டுக்கோட்டையைச் சோ்ந்த குணசீலன் (54) என்பவரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



