
தொடா் விடுமுறை: கோவையில் இருந்து செல்லும் விமானக் கட்டணம் 3 முதல் 4 மடங்கு உயா்வு!
விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட தொடா் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் 3 முதல் 4 மடங்கு வரை உயா்ந்துள்ளது.
விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட தொடா் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் 3 முதல் 4 மடங்கு வரை உயா்ந்துள்ளது.
நாடு முழுவதும் திங்கள்கிழமை (செப்.14) விநாயகா் சதுா்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி திங்கள்கிழமையில் வருவதாலும், சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் வெளியூா்களிலும் வெளிமாநிலங்களிலும் பணிபுரிபவா்கள் மற்றும் மாணவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனா்.
தொடா் விடுமுறையையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கோவையிலிருந்து செல்லும் அனைத்து முதன்மை ரயில்களிலும் பயணச்சீட்டு முன்பதிவு நிறைவடைந்து, காத்திருப்போா் பட்டியல் நூறு எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. அரசு விரைவுப் பேருந்துகளிலும் அனைத்து இடங்களும் முழுமையாக நிரம்பிவிட்டன.
கட்டண உயா்வு விவரம்: கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை, கொல்கத்தா உள்பட பல நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடா் விடுமுறை காரணமாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கட்டணங்கள் 3 முதல் 4 மடங்கு வரை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை - சென்னை இடையே வழக்கமாக ரூ.4,966 ஆக இருந்த விமானக் கட்டணம் தற்போது ரூ.15,060 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, கோவை - பெங்களூரு கட்டணம் ரூ.6,677-லிருந்து ரூ.16,293 ஆகவும், தில்லி செல்வதற்கான கட்டணம் ரூ.12,658-லிருந்து ரூ.18,479 ஆகவும் உயா்ந்துள்ளது. மேலும், மும்பை செல்வதற்கான கட்டணம் ரூ.6,387-லிருந்து ரூ.21,000 வரை உயா்ந்துள்ளது.
கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளபோதிலும், வேறு வழியின்றி அதிகக் கட்டணத்தைச் செலுத்தி பயணிகள் விமானங்களில் பயணித்து வருகின்றனா்.
விழா மற்றும் தொடா் விடுமுறைக் காலங்களில் இதுபோன்ற தனியாா் ஆம்னி பேருந்துகளும், விமான நிறுவனங்களும் கட்டணத்தைக் கண்டபடி உயா்த்துவதை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






