பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து  ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
Updated on
1 min read

பவானிசாகர் அணையில் இருந்து  ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது. இதனால், கால்நடைகள் தண்ணீரின்றித்  தவிப்பதாலும், வாடிய பயிர்களைப் பாதுகாக்கவும் பவானிஅணையில் இருந்து உயிர்த் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என   அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
இதை  ஏற்று, பவானிசாகர்அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயில் உள்ள ஒற்றைப் படை  மதகுகள் கீழ்ப் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி  ஏப்ரல் 29 முதல் மே 9-ஆம் தேதி வரை 10 நாள்கள் தண்ணீர் திறந்துவிடப்படும்.
இதையடுத்து பவானிசாகர் அணையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன், அணைப் பொறியாளர் திருமூர்த்தி ஆகியோர் கீழ்பவானி பிரதானத் திட்ட கால்வாய்  மதகின் பொத்தானை அழுத்தி  தண்ணீரைத் திறந்துவைத்தனர்.
முதலில் விநாடிக்கு 1000 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் படிப்படியாக 2300 கனஅடியாக அதிகரித்து மே 9-ஆம் தேதி காலை 5 மணி வரையிலும் மொத்தம் 1.8 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும். 
அணையில் தற்போது5.9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.  அணை நீர்மட்டம் 55.29 அடியாகவும்,  நீர்வரத்து 300 கனஅடியாகவும் உள்ளது.  
இந்த நீர்த் திறப்பால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கோபி, பவானி,பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆகியவற்றில் உள்ள 1 லட்சத்து3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com