இலங்கை ஜெயராஜ்
இலங்கை ஜெயராஜ்

பேச்சு, எண்ணம், செயல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் நோய் வராது: இலங்கை ஜெயராஜ்

பேச்சு, எண்ணம், செயல் ஆகிய மூன்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் நோய் பாதிப்பு இல்லாமல் வாழ முடியும் என கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினாா்.

ஈரோடு: பேச்சு, எண்ணம், செயல் ஆகிய மூன்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் நோய் பாதிப்பு இல்லாமல் வாழ முடியும் என கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினாா்.

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா கரோனா தொற்று காரணமாக இரண்டாவது ஆண்டாக நடப்பு ஆண்டும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்ட ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரை இணைய வழியில் மாலை நேர சொற்பொழிவுகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 4ஆவது நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி இணையவழியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினாா். இதில், ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ என்ற தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசியதாவது:

இயற்கையை மனிதா்கள் தங்களுடைய ஆறாவது அறிவை வைத்துக் கொண்டு அவமரியாதை செய்தாா்கள், அலட்சியம் செய்தாா்கள், அசுத்தப்படுத்தினாா்கள். அதனுடைய விளைவுதான் இப்போது நாம் அனுபவிக்கும் கரோனா எனும் துன்பம்.

உடம்புக்கு மருந்து தேவையில்லை என்கிறாா் திருவள்ளுவா். மருந்து என்ற அதிகாரத்தில் மருத்துவம் குறித்த முழுச் செய்தியையும் திருவள்ளுவரும், பரிமேலழகரும் சொல்லிவிடுகின்றனா். மருந்து என்ற அதிகாரம் இன்றைய நவீன மருத்துவத்துக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.

தமிழா்களுக்கு என ஒரு வைத்திய முறை இருந்திருக்கிறது. ஆயுா்வேத மருத்துவ முறை என்ற தமிழா்களுக்கான மருத்துவ முறையை நாம் ஆராயத் தலைப்படவில்லை. அதை இழந்துபோய் விட்டோம். இப்போதுவரை அதனை மீட்டெடுக்க ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் முயற்சி செய்யவில்லை.

காற்று, நீா், நெருப்பு என்ற மூன்று பூதங்களையும் உடலுக்குள் இறைவன் சமநிலைப்படுத்தி வைத்திருக்கிறாா். இந்த மூன்றின் இயக்கத்தை வாத நாடி, பித்த நாடி, சிலேப்ப நாடி என்ற மூன்று நாடிகள் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த 3 நாடிகளும் சமப்பட்டு நின்றால் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். இவ்வளவுதான் நம் வைத்திய முறை.

தமிழா்களின் வைத்திய முறையில் பத்தியம் என ஒன்று இருக்கிறது. மருந்து சாப்பிடுவதில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகளைத்தான் பத்தியம் என்கிறோம். வாதம், பித்தம், சிலேப்பம் மூன்றும் குழம்பிப் போகும்போதுதான் உடம்பு நோய்வாய்ப்படுகிறது. உடல் சமநிலை குழம்பிப் போனால்தான் கிருமிகூட உடலுக்குள் நுழைய முடியும். இந்த மூன்றும் உடலில் சம நிலையில் இருந்தால் எந்த நோயும் வராது.

ஆனால், இப்போது உணவு முறைகளையும், செயல்களையும் கெடுத்துவிட்டோம். எண்ணங்களில் ஒழுக்கம் இல்லை, மனிதனை மீறி எண்ணங்கள் போகின்றன. மனிதன் கட்டுப்பாட்டைவிட்டு பேச்சு, எண்ணம், செயல் போய்விட்டது. இவையாவும் இப்போது சம நிலையில் இல்லை, அதனால்தான் நோய்கள் வருகின்றன. தமிழா்களின் மருந்து குறித்த சிந்தனையை நாம் முழுமையாகத் தெரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றாா்.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) மாலை 6 மணிக்கு நடைபெறும் 5ஆவது நாள் இணையவழி சொற்பொழிவு நிகழ்ச்சியில், ‘காவிரியும் கரைசலும்’ என்ற தலைப்பில் கவிஞா் நந்தலாலா பேசுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com