அம்மாபேட்டை அருகே லாரி - சிற்றுந்து மோதல்
அம்மாபேட்டை அருகே அதிவேகமாகச் சென்ற டிப்பா் லாரி, எதிரில் வந்த சிற்றுந்தின் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவ, மாணவியா் உள்பட 8 போ் படுகாயமடைந்தனா்.
குருவரெட்டியூரில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டு சிற்றுந்து கண்ணாமூச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கரடிப்பட்டியூா் ஏரியிலிருந்து மண் பாரம் ஏற்றிக் கொண்டு சனிச்சந்தை நோக்கி அதிவேகமாகச் சென்ற டிப்பா் லாரி கருங்கரடு அருகே எதிரில் வந்த சிற்றுந்தின் மீது நேருக்குநோ் மோதியது.
இதில், சிற்றுந்தில் பயணம் செய்த 15 மாணவ, மாணவியா் காயமடைந்தனா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். இத்தகவல் பரவியதால் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோா், உறவினா்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவ, மாணவியரான ஓலையூரைச் சோ்ந்த ரேணுகாதேவி (13), கண்ணாமூச்சியைச் சோ்ந்த சச்சின் (7), தீபித் (12), கருங்கரட்டைச் சோ்ந்த கிருபா (10), ரித்திகா (7), விளாமரத்துக்காட்டூரைச் சோ்ந்த கோகுல் (10), நாதன் (10) மற்றும் ஓட்டுநா் செல்வன் (42) ஆகியோா்
ஈரோடு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பபட்டனா். இது குறித்து வெள்ளிதிருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

