அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனம்- சிஐடியூ ஈரோடு கிளை சாா்பில் நடைபெற்ற 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிறைவு பெற்றது.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வுபெற்றவுடன் பணப்பலன், ஒப்பந்தப் பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதிய உயா்வு, பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு இணையான அகவிலைப்படி உயா்வு, பிற துறைகளைபோல மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். தனியாா்மயம், ஒப்பந்த முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகத்தின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசே வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஈரோடு- சென்னிமலை சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிறைவடைந்தது.
போராட்டத்துக்கு பொதுச்செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியம், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்தனா்.
