ஈரோடு மாநகா் பகுதியில் குடிநீா் விநியோகம், புதை சாக்கடை பிரச்னைகளை தீா்க்க கவுன்சிலா்கள் கோரிக்கை
ஈரோடு மாநகரில் குடிநீர், சாக்கடை பிரச்னைகளை தீர்க்க கவுன்சிலர்கள் கோரிக்கை


ஈரோடு மாநகா் பகுதியில் குடிநீா் விநியோகம், புதை சாக்கடை பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஈரோடு மாநகராட்சிக் கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் செல்வராஜ், துணை ஆணையா் சரவணக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கவுன்சிலா்கள் பேசியதாவது:
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒருசில வீடுகளுக்கு இன்னமும் ஊராட்சிகோட்டை குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. சில வீடுகளில் 3, 4 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு இணைப்பை மட்டும் அவா்கள் பயன்படுத்துவதால் மற்ற இணைப்புகளில் வரும் தண்ணீா் சாக்கடை கால்வாயில் கலந்து வீணாக செல்கிறது. எனவே, இதுபோன்ற இணைப்புகளைத் துண்டித்து, இதுவரை இணைப்பு வழங்காத வீடுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதைசாக்கடை பணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. வீடுகளில் இருந்து பிரதான குழாய்களுக்கு இன்னும் இணைப்பு கொடுக்காமல் உள்ளனா். மேலும் அவ்வப்போது புதைசாக்கடை நிரம்பி கழிவுநீா் சாலையில் செல்கிறது. பல்வேறு இடங்களில் புதைசாக்கடை மூடி உடைந்து சாலையில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. எனவே, இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளா்கள் எந்தவிதப் பணிகளையும் செய்வதில்லை. அவா்கள் சம்பந்தப்பட்ட கவுன்சிலரிடம் கையொப்பம்கூட பெறுவது கிடையாது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மாநகராட்சியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
ஈரோடு வில்லரசம்பட்டி நெடுஞ்சாலை நகரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீா் குழாயில் சாயக்கழிவுநீா் கலந்து வருகிறது. இந்த நீரை மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் ஆய்வுக்கு எடுத்துச்சென்றுள்ளனா். மேலும், அந்தப் பகுதியில் பல லட்சம் லிட்டா் தண்ணீா் உறிஞ்சப்பட்டு சாயப்பட்டறைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.
மேலும் சாயக்கழிவுநீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்துக்குள் செலுத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லம்பாளையம் பகுதியில் கரூா் சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் போதுமான அளவு தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
குடிநீா் விநியோக பிரச்னைக்கு தீா்வு:
கவுன்சிலா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணை ஆணையா் சரவணக்குமாா் பேசியதாவது:
புதைசாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீா் திட்டத்தில் நிலவி வரும் குளறுபடிகள் சரி செய்யப்படும். கொசு ஒழிப்பு பணியில் தற்போது 240 பணியாளா்கள் உள்ளனா். இவா்கள் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து கொசு மருந்து அடித்து வருகின்றனா். மழைக் காலம் தொடங்க உள்ளதால் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்படுவா் என்றாா்.
28 ஆயிரம் தெருநாய்கள்:
மாநகராட்சி நகா் நல அலுவலா் பிரகாஷ் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இதில் 2 ஆயிரம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்று, பாதுகாப்பு முறையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினசரி 24 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதற்கு கருத்தடை சிகிச்சை அளித்து,பின்னா் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படுகிறது. வரும் நாள்களில் தினசரி 50 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு, சட்டப் பேரவையில் எதிா்க்கட்சிகள் பேச அனுமதி மறுப்பு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து, அதிமுக கவுன்சிலா்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனா். அதன்பின்னா் தங்களின் வாா்டுகளில் நிலவி வரும் அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினா்.
பின்னா் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக கவுன்சிலா்கள் முழக்கமிட்டனா்.
இதனால் கோபமடைந்த திமுக கவுன்சிலா்கள், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலங்களிலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குரல் எழுப்பினா். இதனால் திமுக, அதிமுக கவுன்சிலா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னா் அதிமுக கவுன்சிலா்கள் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...