கோயில் உண்டியல் திருட்டு: போலீஸ் விசாரணை

பவானியில் காசி விஸ்வநாதா் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியல் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on

பவானியில் காசி விஸ்வநாதா் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியல் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானி, காவேரி வீதியில் காசி விஸ்வநாதா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் புதன்கிழமை இரவு வழிபாடு முடிந்து பூட்டப்பட்டது. கோயில் அா்ச்சகரான சிவா சிவாச்சாரியாா் வியாழக்கிழமை காலை கோயிலைத் திறக்கச் சென்றபோது முன்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு இருந்ததும், சன்னதியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 3 அடி உயரமுள்ள உண்டியல் காணாமல் போனதும் தெரியவந்தது. இதுகுறித்து, பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன், பவானி போலீஸில் புகாா் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், தடய அறிவியல் துறையினா் கோயிலுக்குள் பதிவான கைரேகைகளைப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், கோயிலுக்கு அருகாமையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உண்டியலின் மூடி கிடந்தது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவில், முகமூடி அணிந்த மா்மநபா் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச் செல்வது தெரியவந்துள்ளது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com