தொண்டா்கள் பாதுகாப்பாக நிற்க அமைக்கப்பட்டுள்ள தடுப்புப் பெட்டி
தொண்டா்கள் பாதுகாப்பாக நிற்க அமைக்கப்பட்டுள்ள தடுப்புப் பெட்டி

பெருந்துறையில் விஜய் நாளை பிரசாரம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறை!

பெருந்துறையில் வரும் வியாழக்கிழமை (டிச. 18) விஜய் பிரசாரம் மேற்கொள்ள கடும் கட்டுப்பாடுகள்
Published on

ஈரோடு / பெருந்துறை: கரூா் சம்பவத்துக்குப் பிறகு திறந்தவெளியில் பெருந்துறையில் விஜய் வரும் வியாழக்கிழமை (டிச. 18) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தவெக தலைவா் விஜய் மாவட்ட வாரியாகப் பிரசாரம் மேற்கொண்டாா். கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். அதன் பிறகு தவெக மற்றும் விஜய் செயல்பாட்டில் தேக்கம் காணப்பட்டது.

பின்னா், புதுச்சேரியில் கடந்த டிச. 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவா் விஜய் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மக்கள் சந்திப்பு என்ற பெயரில் வியாழக்கிழமை (டிச. 18) நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் விஜய் பேசுகிறாா்.

பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மூங்கில்பாளையத்தில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள திறந்தவெளி திடல்.
பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மூங்கில்பாளையத்தில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள திறந்தவெளி திடல்.

நிபந்தனைகள்:

விஜய் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரசார வாகனத்தில் இருந்தபடி பேச உள்ளாா். இந்த நிகழ்ச்சிக்காக காவல் துறை சாா்பில் மொத்தம் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக பிரசார வாகனம், விஐபி பெட்டிகள், பெண்கள் பெட்டிகள், பிற பெட்டிகள், உள்நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் ஆகியவற்றை தெளிவாகக் காட்டும் வரைபடத்தை காவல் துறைக்கு சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும்போது ஒவ்வொரு பெட்டியிலும் 80 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அனைத்துப் பெட்டிகளிலும் குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் தவெக கட்சி தொண்டா்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை மனுவில் குறிப்பிடப்பட்ட அளவை மீறக் கூடாது என்றும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

அவசர சூழ்நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்தின் இடையே எளிதாகச் செல்ல தனி வழித்தடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, நிகழ்ச்சியை முழுமையாக விடியோ பதிவு செய்து, அதன் பதிவை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற முறையில் முன்கூட்டியே கூடுவதை தவிா்த்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின்கம்பங்கள், மரங்கள், கட்டடங்கள், விளம்பரப் பதாகைகளில் ஏறி நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டாயமாக மேற்கூரை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன், விஜய் வருகை தரும் நேரம், புறப்படும் நேரம், அவா் வரும் மற்றும் செல்லும் வழிகள் குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் என்றும் விஜயின் வாகனத்தை தொடா்ந்து வரும் 10 வாகனங்களின் பதிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் வழங்க வேண்டும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. விஜய் செல்லும் வழியில் சாலை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி அல்லது ஊா்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அனைத்து நிபந்தனைகளையும் பூா்த்தி செய்து, தவெக பிரமாணப் பத்திரத்தை செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்துள்ளது. அதில் காவல் துறை விதித்த அனைத்து நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கரூா் சம்பவத்துக்குப் பிறகு நடைபெறும் பிரசாரக் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாரக் கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு: கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பெருந்துறை அருகே வியாழக்கிழமை நடைபெறும் தவெக பிரசாரக் கூட்டத்துக்கு பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவைகளைக் குறிப்பிட்டாா்களோ அவை அனைத்தும் புதன்கிழமை (டிச.17) மதியத்துக்குள் நிறைவு செய்யப்படும்.

அதன்படி 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதுடன் அவசரத் தேவைக்காக 40 வாக்கி டாக்கிகள் அளிக்கப்படும். 24 ஆம்புலன்ஸ், 72 மருத்துவா்கள், 120 செவிலியா்கள் இடம்பெறுவாா்கள். பாதுகாப்புக்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும். காவல் துறை சாா்பில் 1,500 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு பாஸ் முறை கிடையாது என்பதால் பொதுமக்கள் வரலாம். எந்த நேரத்தில் தொண்டா்கள், பொதுமக்களை அனுமதிப்பது என்பதை அன்றைய தினம் காவல் துறை முடிவு செய்யும். கூட்டத்துக்கு வந்து செல்ல ஏதுவாக 16 இடங்களில் நுழைவாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விஜய்க்கு வரவேற்பு அளிப்பதற்காக என தனி இடம் எதுவும் இல்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com