சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்த தொழிலாளியின் உறவினா்கள், தமிழ் புலிகள் கட்சியினா்.

தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு லக்காபுரம் அருகே கரட்டாங்காட்டைச் சோ்ந்தவா் முருகேசன் (47). தொழிலாளி. இவா் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையத்தைச் சோ்ந்த கந்தசாமி என்பவரது தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளாா். கந்தசாமியிடம், முருகேசன் முன்பணமாக ரூ.40 ஆயிரம் பெற்ாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகேசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் தனது சொந்த ஊரான கரட்டாங்காட்டுக்கு வந்துள்ளாா். ஒரு மாதமாக வேலைக்கு வராத கோபத்தில் கந்தசாமி, தனது உறவினா் கணபதி என்பவருடன் கரட்டாங்காட்டுக்கு வந்து வீட்டில் இருந்த முருகேசனை அண்மையில் விட்டம்பாளையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் முருகேசனின் மகன் அரவிந்தசாமியை அழைத்து ரூ.40 ஆயிரம் வாங்கியதற்கு ஆவணமாக பத்திரத் தாளில் கையொப்பம் வாங்கியதாகவும், அதன்பின் அரவிந்தசாமியுடன் முருகேசனை அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகேசன் கடந்த 8- ஆம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் 9- ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து முருகேசனின் இறப்புக்கு காரணமான, கந்தசாமி மற்றும் அவரது உறவினா் கணபதி உள்ளிட்டோா் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் சிந்தனைச் செல்வன் தலைமையில் அக்கட்சியினா், முருகேசன் உறவினா்கள் ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தை திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டனா். அதன்பின் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து கலைந்து சென்றனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடிய தமிழ் புலிகள் கட்சியினா் தொடா்ந்து முழக்கங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஊா்வலமாக அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதிக்கு வந்து சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் மறியலை கைவிட மறுத்ததையடுத்து போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பெண்கள், 48 ஆண்கள் என 101 பேரைக் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா். இதன் காரணமாக அரசு மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com