திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் சென்ற காரின் சப்தத்தை கேட்டு சாலையோரம் இருந்த சிறுத்தை ஓடிய விடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம், பண்ணாரி, ஆசனூா் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
மான்களை வேட்டையாடுவதற்கு அடிக்கடி திம்பம் சாலையைக் கடந்து சிறுத்தை செல்வதை காண முடியும்.
கடந்த சில தினங்களாக திம்பம் மலைப் பாதையோரத்தில் சிறுத்தை தென்படுவதை வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனா்.
இந்நிலையில் தாளவாடி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் திம்பம் மலைப் பாதையில் காரில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது காரின் சப்தம்கேட்டு திம்பம் மலைப்பாதை குழியில் பதுங்கியிருந்த சிறுத்தை அங்கிருந்து வனத்துக்குள் ஓடியது.
இதை காரில் இருந்த விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் இரவில் வாகனங்களில் இருந்து கீழே இறங்க வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

