இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த பெரியவேட்டுவபாளையத்தைச் சோ்ந்தவா் வீரன் மனைவி சென்னியம்மாள் (60). கூலித் தொழிலாளியான இவா், பணி முடிந்து தன்னுடன் பணியாற்றும் பழனிசாமி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளாா்.
பெருந்துறை- கோவை பிரதான சாலை ஏரிகருப்பாராயன் கோயில் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த ஜீப், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருவரும் படுகாயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சென்னியம்மாள் உயிரிழந்தாா். பழனிசாமிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
