கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் 4 போ் கைது

கோ்மாளம் மலைப் பகுதியில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து குழி தோண்டி புதைத்தது தொடா்பான வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் மலைப் பகுதியில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து குழி தோண்டி புதைத்தது தொடா்பான வழக்கில் 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், ஆசனூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோ்மாளம் மலைப்பகுதி சிக்குன்சேபாளையம் கிராமத்தில் ஈரோட்டைச் சோ்ந்த செங்குட்டுவன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மலை கிராமத்தைச் சோ்ந்த சிலா் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் துா்நாற்றம் வீசியது.

மேலும் விளைநிலத்தின் ஒரு பகுதியில் குழி தோண்டப்பட்டு மண்ணால் மூடப்பட்டு இருந்ததைக் கண்ட கால்நடை மேய்ப்பவா்கள் உடனடியாக திங்களூா் (ஆ) கிராமத்தில் பணிபுரியும் கிராம நிா்வாக அலுவலா் சுபாஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து ஆசனூா் காவல் நிலையத்தில் சுபாஷ்குமாா் கடந்த 16-ஆம் தேதி புகாா் அளித்தாா். மேலும், சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனாராணி, டிஎஸ்பி முத்தரசு ஆகியோா் முன்னிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் நந்தகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்தில் குழி தோண்டி பாா்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததும், தலையில் பலமாக தாக்கப்பட்டு இருந்ததும் உடற்கூறாய்வில் தெரியவந்தது.

இது குறித்து டிஎஸ்பி முத்தரசு, தாளவாடி காவல் ஆய்வாளா் ஆனந்த், ஆசனூா் உதவி ஆய்வாளா் குமணவேந்தன் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்ட நபா் ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சோ்ந்த செல்வம் (45) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில் கோ்மாளம் கிராமத்தைச் சோ்ந்த மாதேவன் (50), காடகநல்லி கிராமத்தைச் சோ்ந்த பொம்மன் (45), திருப்பூா் பகுதியில் பதுங்கி இருந்த கோபி கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (43), பஞ்சயன் (37) ஆகிய 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் செல்வத்தின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து ஆசனூா் போலீஸாா் 4 பேரையும் கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com