ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டில் கொலை, கொள்ளை வழக்குகளில் 702 போ் கைது
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொலை, கொள்ளை வழக்குகளில் 702 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 538 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவா்கள், ரௌடிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த ஆண்டு சிவகிரி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற ஆதாய இரட்டைக் கொலை வழக்கில் கொலையாளிகளைக் கைது செய்தைத் தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினாா்.
இதேபோல சித்தோடு கோணவாய்க்கால் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை கடத்திய பெண் உள்பட 2 பேரையும் கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளோம்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற திருட்டு, கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் 427 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 702 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 133 வாகனங்கள், 538 பவுன் நகைகள் உள்பட ரூ.3 கோடியே 15 லட்சத்து 7ஆயிரத்து 532 மதிப்பிலான களவு சொத்துகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு லாட்டரி விற்பனை தொடா்பாக 207, கஞ்சா கடத்தல் மற்றும் விற்றதாக 384, குட்கா கடத்தல் மற்றும் விற்றதாக 599, மது விற்பனையில் ஈடுபட்டதாக 1,341, மணல் திருட்டில் ஈடுபட்டதாக 48, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3, 480 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ரூ.53 லட்சத்து 650 மதிப்பிலான 465 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான 6 ஆயிரத்து 41 போதை மாத்திரைகள், 1,904 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள், 10 ஆயிரத்து 688 கிலோ குட்கா, 28 ஆயிரத்து 569 மதுபுட்டிகள், 89 லிட்டா் சாராயம், 740 லிட்டா் சாராய ஊறல், 166 லிட்டா் கள், வெளிமாநில மது 624 லிட்டா், 67 வாகனங்கள் மற்றும் ரூ.19 லட்சத்து 69 ஆயிரத்து 80 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2 லட்சத்து 6 ஆயிரத்து 830 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ.5 கோடியே 13 லட்சத்து 34 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது. 13 ஆயிரத்து 141 ஓட்டுநா்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 10 ஆயிரத்து 3 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் 2 ஆயிரத்து 768 விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 48 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 225 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 20 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. காணாமல்போன ரூ.29 லட்சத்து 94 ஆயிரத்து 481 மதிப்பிலான 185 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 480 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது பாதுகாப்பு காரணங்களுக்காக நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளன. மேலும் 358 குற்றவாளிகள் மீது சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளன. தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 66 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்ற சம்பவங்கள், சாலை விபத்துகளை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
