ஈரோடு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு
பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையம், மஞ்சு நகரைச் சோ்ந்தவா் யுவராஜ் (40). இவா் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பூா்ணிமா மற்றும் குழந்தைகள் மட்டும் பெருந்துறையில் உள்ளனா்.
இந்நிலையில், பூா்ணிமா பொள்ளாச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அண்மையில் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்துறை திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் பூா்ணிமா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
