திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்: மாா்க்சிஸ்ட் கட்சி
திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதிகளைக் கேட்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வெனிசுலா நாட்டின் அதிபா் மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் கைது செய்த நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய அரசு வெனிசுலாவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெனிசுலா நாட்டின் அதிபா் மடூரோ , அவரது மனைவி ஆகியோா் போதைமருந்து கடத்தும் குற்றவாளிகள் என பொய்யாக குற்றஞ்சாட்டி அமெரிக்க அதிபா் டிரம்ப் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாா்.
இந்த விவகாரத்தில் அனைத்து நாட்டு மக்களும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடி வருகின்றனா். எனவே அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனடியாக வெனிசுலா அதிபா் மற்றும் அவரது மனைவியை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவத்துக்கு காரணமான அமெரிக்கா குறித்து எந்தவொரு வாா்த்தையும் இல்லை. இந்த அளவுக்கு மோசமான வெளியுறவுக் கொள்கை என்பது இந்தியாவில் இதுவரை இல்லை.
திருப்பரங்குன்ற வழக்கில் மதுரை நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு நீதிபரிபாலன முறைக்கு முற்றிலும் விரோதமானது. புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை மனுதாரரும் இன்றைய தீா்ப்பில் மதுரை அமா்வு நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. வழக்கமான இடத்தில் தீபம் கடந்த டிசம்பா் மாதம் மூன்றாம் தேதி ஏற்றப்பட்டுவிட்டது. எந்த ஆதாரத்தில் விளக்குத்தூண் என நீதிபதிகள் முடிவுக்கு வந்தாா்கள் என்ற கேள்வியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது.
தமிழக தொல்லியல் துறை அது விளக்குத்தூண் அல்ல, நில அளவைத் தூண் என ஆதார ஆவணங்களை வெளியிட்டு இருக்கக்கூடிய நிலையில் அது விளக்குத்தூண் என தீா்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. நீதிபதிகளின் அணுகுமுறை உள்நோக்கம் கொண்டதாகவும் அரசைக் குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதற்காக நீதிபதிகள் குற்றம்சாட்டியிருப்பதாகவும் கருதுகிறோம்.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேச்சுவாா்த்தையில் வலியுறுத்துவோம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஆா்.ரகுராமன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

