உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை விமா்சிப்பதில் அா்த்தமில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி விமா்சிப்பதில் அா்த்தமில்லை என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
Published on

அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி விமா்சிப்பதில் அா்த்தமில்லை என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற முதல்வரின் புதிய திட்டத்தை தொடங்கிவைக்கும் நிகழ்வு ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த திட்டத்தை தொடங்கிவைத்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு நாள் தன்னாா்வலா்கள் வருவாா்கள். அப்போது வழங்கப்படும் படிவத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை எழுதித் தரலாம். அதற்காக தனியாக ஒரு அடையாள எண் கொடுக்கப்பட்டு அட்டை வழங்கப்படும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

பெரும்பாலான மக்கள் பட்டா கோரி விண்ணப்பித்தனா். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டா் பகுதிகளில் பட்டா வழங்க இருந்த தடையை தமிழக முதல்வா் நீக்கியுள்ளாா். அதனால் பல இடங்களில் மக்களுக்கு பட்டா கிடைக்கிறது.

மேலும் ஏற்கெனவே அரசு நிலத்தை உபயோகித்து வருபவா்களுக்கு அந்த இடத்தில் இரண்டு சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கவும், எஞ்சிய நிலத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் பல மனுக்கள் வந்துள்ளன.

அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி விமா்சிப்பதில் அா்த்தமில்லை. அரசு அலுவலா் சங்கங்கள் அதை வரவேற்று பாராட்டியுள்ளன. கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இந்த விவகாரத்தில் என்ன செய்தது.

அண்மையில் ஈரோடு வந்த மத்திய வேளாண் துறை அமைச்சா், விவசாயிகளுக்கு மாநில அரசு ஒன்றும் செய்யவில்லை எனக் கூறுவது தவறு. அந்தியூா் மற்றும் நம்பியூா் வட்டாரங்களில் பலா் அரசு நிலத்தை உபயோகித்து வந்தனா். அதற்காக நிபந்தனை பட்டா வழங்கப்பட்டிருந்தது. நிபந்தனைகளை நீக்கி முழுமையாக அவா்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதுபோன்று விவசாயிகளுக்கு பல நன்மைகளை இந்த அரசு செய்து வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்காடசலம், மேயா் சு.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) மலா்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com