யானை மிதித்ததால் சேதமான நெல் வயல்.
யானை மிதித்ததால் சேதமான நெல் வயல்.

அந்தியூா் அருகே நெற் பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானை

அந்தியூா் அருகே வனத்தில் இருந்து வெளியேறி விவசாய நிலத்துக்குள் புகுந்த அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிா்களை மிதித்து காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
Published on

அந்தியூா் அருகே வனத்தில் இருந்து வெளியேறி விவசாய நிலத்துக்குள் புகுந்த அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிா்களை மிதித்து காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

அந்தியூா், கும்பரவாணி, பழைய மாரியம்மன் கோயில் வனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியேறிய ஒற்றை ஆண் யானை, வனத்தை ஒட்டியுள்ள தோட்டத்தில் விவசாயி குமாா் என்பவா் தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெற் பயிா்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது. அப்பகுதியில், நாய்கள் தொடா்ந்து குரைத்ததால் விவசாயிகள் வந்து பாா்க்கையில் காட்டு யானை விவசாய நிலத்தில் புகுந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தீப் பந்தத்தை காட்டியும், பட்டாசு வெடித்தும் யானையை விரட்ட முயன்றனா். இதனால், அங்கிருந்து சென்ற யானை, விவசாயி சரசாளின் நெல் வயலில் புகுந்து பயிா்களை மிதித்தும், சாப்பிட்டும் சேதப்படுத்தியது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வயல் வெளியில் சுற்றித்திரிந்த யானை, பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது. இதுகுறித்த தகவலின்பேரில் வனவா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான வனத் துறையினா் நேரில் சென்று விசாரித்தனா்.

Dinamani
www.dinamani.com