தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வு: ஈரோட்டில் 6,529 போ் எழுதினா்
ஈரோடு மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வினை 27 மையங்களில 6,529 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி திட்ட தோ்வு (என்எம்எம்எஸ்) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 2025-2026- ஆம் ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வினை ஈரோடு மாவட்டத்தில் 27 தோ்வு மையங்களில் 6,662 மாணவ, மாணவிகள் எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் 133 போ் தோ்வுக்கு வரவில்லை. 6,529 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.
தோ்வானது ஓஎம்ஆா் விடைத்தாள் முறையில் நடைபெற்றது. இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை பிளஸ் 2 படிக்கும் வரை அரசால் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

