புகையில்லா போகி: சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகராட்சியில் புகையில்லா போகியை கொண்டாடுமாறு சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது: போகி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருள்களை சாலையேரங்களில் வீசுவதாலும், தீமூட்டி எரிப்பதாலும் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
பொதுமக்களிடமிருந்து தேவையற்ற பொருள்களைப் பெற நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கென உள்ள வாகனங்களில் தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாக வந்து பழைய கழிவுகளைப் பெறுவா். அவா்களிடம் தங்களது பழைய பொருள்களை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வழங்க வேண்டும். சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுவோா், கழிவுகளை தீமூட்டி எரிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புகையில்லா போகியைக் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
