பவானிசாகரை  அடுத்த  ஆலாம்பாளையத்தில்  யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  வாழைக்கன்றுகள்.
பவானிசாகரை  அடுத்த  ஆலாம்பாளையத்தில்  யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  வாழைக்கன்றுகள்.

பவானிசாகா் அருகே தோட்டத்துக்குள் புகுந்து வாழைக் கன்றுகளை சேதப்படுத்திய யானைகள்

பவானிசாகா் அருகே வாழைக்கன்றுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை
Published on

பவானிசாகா் அருகே வாழைக்கன்றுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உலவுகின்றன. இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், ஊருக்குள் புகுந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கிறது.

இந்நிலையில், பவானிசாகா் அருகே உள்ள விளாமுண்டி வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், ஆலாம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து விவசாயி தங்கராஜ் (54) தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைக்கன்றுகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. மேலும், நீா் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிவிசி பைப்களையும் சேதப்படுத்தியுள்ளன. நள்ளிரவு நேரத்தில் புகுந்ததால் அச்சமடைந்த விவசாயிகள், ஒன்றிணைந்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா். இருப்பினும், காட்டு யானைகளால் 300-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகள் சேதமடைந்தன.

சேதமடைந்த பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வனப் பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com