கோபி அருகே கரட்டடிபாளையம் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா்களுக்கான மலை சூழற்சி கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆசிரியா்கள் கலந்தாய்வை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டடிபாளையம் ஆரம்பப் பள்ளியில் அந்தியூா், சத்தியமங்கலம் வட்டார ஆசிரியா்களுக்கான மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அந்தியூா், சத்தியமங்கலம், பகுதியில் இருந்து கலந்தாய்வில் பங்கேற்க வந்த பல்வேறு ஆசிரியா் சங்க கூட்டமைப்பைச் சோ்ந்த ஆசிரியா்கள் மலைசூழற்சி மாறுதல் கலந்தாய்வை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி சரத் அருள்மாறன் கூறியதாவது:
அரசாணை எண் 243-இன் படி ஆசிரியா்களுக்கு பதிவி உயா்வு, பணி மாறுதல், பணி நியமனம் என அனைத்தும் மாநில அளவில் நடைபெறும்போது, மலைசுழற்சி மட்டும் வட்டார அளவில் நடத்தப்படுவது விதிமுறைக்கு முரணானது. எனவே அரசாணை 243-இன் படி மலைசுழற்சி மாறுதலை மாநில அளவில் நடத்த வேண்டும். மலைப் பகுதியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களை மலைப் பகுதியிலேயே பணிபுரிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதை கைவிட்டு அவா்களை மலை இறக்கம் செய்ய வேண்டும்.
ஆசிரியா்களுக்கு காலவதியான வட்டார முன்னுரிமைப்படி நடத்தப்படும் இந்த மலைசூழற்சி மாறுதலை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் அரசாணை 243-ஐ அமுல்படுத்தி மாநில முன்னுரிமை அடிப்படையில் மலை சூழற்சி மாறுதலை முறையை நடத்த வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 21 ஒன்றியங்களில் 5 ஆயிரம் ஆசிரியா்கள் சாா்ந்த பிரச்னையாக உள்ளது. இதற்கு தொடக்கக் கல்வி நிா்வாகம் சுணக்கமாக இருப்பது அரசுக்கு மென்மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்றாா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, இடைநிலை ஆசிரியா் பதிவுமூப்பு சங்கம், பட்டதாரி ஆசிரியா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா்கள் சங்கங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா், ஆசிரியைகள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலந்தாய்வில் பங்கேற்க மாட்டோம் எனக் கூறி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









