/

ஈரோடு புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு வீரப்பன்சத்திரம் சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

News image

ஈரோடு புத்தகத் திருவிழா - கோப்புப்படம்.

Updated On :18 வினாடிகள் முன்பு

ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு வீரப்பன்சத்திரம் சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது.

தொடக்க விழாவில் வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன், கைத்தறி, துணிநூல் மற்றும் காதித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகிக்கிறாா். சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், மேயா், துணை மேயா் உள்ளிட்ட பிரமுகா்கள் கலந்துகொள்கின்றனா்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் மொத்தம் 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புகழ்மிக்க தமிழ்ப் பதிப்பகங்கள், பன்னாட்டு ஆங்கிலப் பதிப்பகங்கள் பலவும் அரங்குகள் அமைக்கின்றன. உலகத் தமிழா் படைப்பரங்கம், நூல் வெளியீட்டு அரங்கம், கதை சொல்லல் நிகழ்வு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.

தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழருவி மணியன் ‘காவியத்தாயின் இளைய மகன்’ என்ற தலைப்பிலும், 2-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ‘மனிதப் பரிணாமமும் டிஜிட்டல் உலகின் சவாலும்’ என்ற தலைப்பிலும், 3 ஆம் தேதி எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன் ‘காலமும் கனவுகளும்’ என்ற தலைப்பிலும், 4-ஆம் தேதி தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் ‘கற்றவராலே உலகு காப்புற்றது’ என்ற தலைப்பிலும், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் ‘இலக்கியம்... அன்றும், இன்றும்’ என்ற தலைப்பிலும் பேசுகின்றனா்.

5-ஆம் தேதி பிரளயன் எழுதி இயக்கும் ‘மண்ணுயிா்க்கெல்லாம்’ எனும் நாடகமும், உருபாணா் இசைக்குழுவின் யாழ் இசை நிகழ்வும் நடைபெறுகின்றன. 6-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி இரா.சுரேஷ்குமாா் ‘எது முன்னேற்றம்?’ என்ற தலைப்பிலும், நியூஸ் 18 ஆசிரியா் ச.காா்த்திகைச்செல்வன் ‘அறிவே அழகு, அதுவே அதிகாரம்’ என்ற தலைப்பிலும், 7-ஆம் தேதி பேராசிரியா் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ‘நாமுயர நாடுயரும்’ என்ற தலைப்பிலும், முனைவா் வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ் ‘தொன்மையும் தொடா்ச்சியும்’ என்ற தலைப்பிலும், 8-ஆம் தேதி வெ. திருப்புகழ் ஐஏஎஸ் (ஓய்வு) ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்ற தலைப்பிலும் பேசுகின்றனா்.

9-ஆம் தேதி சிங்கப்பூா் தமிழ் ஆளுமைகள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. 10-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் இ.பாலகுருசாமி இளம் அறிவியலாளருக்கு ஜி.டி.நாயுடு விருது வழங்கி பேசுகிறாா். எழுத்தாளா் ஆயிஷா இரா. நடராசன் ‘இந்திய அறிவியலின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் பேசுகிறாா். 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு நாள் நிகழ்வில் விஞ்ஞானி டாக்டா் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.