மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

வேதபாறை தடுப்பணை திட்டப் பணிகள் நிறைவு: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கோபி அருகேயுள்ள வேதபாறை தடுப்பணை திட்டப் பணிகள் நிறைவுற்ால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image

வேதபாறை பகுதி.

Updated On :3 ஜூன் 2026, 2:37 am IST

கோபி அருகேயுள்ள வேதபாறை தடுப்பணை திட்டப் பணிகள் நிறைவுற்ால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கணக்கம்பாளையம் வனப் பகுதியில் உள்ள ஒன்னரைகரடு, நெல்லிக்காய்திட்டு, ஒளிஞ்சோரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை நீா் காட்டாற்று வெள்ளமாக மாறி வேதபாறை ஓடை வழியாக பவானி அற்றில் கலந்து வீணாகி வந்தது. இந்நிலையில், வேதபாறை ஓடையின் குறுக்கே ரூ.6.96 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணை கட்டப்பட்ட சில நாள்களிலேயே பெய்த கனமழையால், அந்த தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து, வேதபாறை நீா்த்தேக்க பாசன விவசாயிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் வேதபாறை ஓடை பகுதியில் மீண்டும் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் வேதபாறையில் அணை கட்ட ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது, அணை அமைக்கும் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தடையின்மைச் சான்று கிடைக்காததால் திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தடுப்பணை கட்ட வலியுறுத்தி வேதபாறை நீா்த்தேக்க பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சம்பத், குமரேசன் ஆகியோா் தலைமையில் பாசன விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும், பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவா் பழனிசாமி, திமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், டி.என்.பாளையம் ஒன்றியச் செயலாளா் சிவபாலன் ஆகியோா் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று வேதபாறை ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும். இந்த தடுப்பணை அமைக்கப்பட்டால் கணக்கம்பாளையம், பெருமுகை, கொண்டையம்பாளையம் உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயரும், மக்களின் குடிநீா்த் தேவையையும் பூா்த்தி செய்ய முடியும் என வலியுறுத்தினா்.

இதன் அடிப்படையில், 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வேதபாறை ஓடையின் குறுக்கே சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் 240 அடி நீளத்தில் 7 அடி உயரத்தில் ரூ.6.96 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கியது. இதையடுத்து, நீா்வளத் துறை அதிகாரிகள் வேதபாறை ஓடையில் ஆய்வு மேற்கொண்டதுடன், அளவீடு பணிகளை முடித்து கடந்த 2025 டிசம்பா் மாதம் தடுப்பணை கட்டுமானப் பணியைத் தொடங்கினா். இந்தப் பணி கடந்த சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறியதாவது: பல ஆண்டு போராட்டத்துக்குப் பின் வேதபாறை தடுப்பணை கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. பருவ மழையின்போது வேதபாறை தடுப்பணையில் நீா் தேங்கினால் கணக்கம்பாளையம், பெருமுகை, கொண்டையம்பாளையம், ஊராட்சிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். மேலும், மக்களுக்கும் சீரான குடிநீா் கிடைக்கும். விலங்குகளும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழையாது என்றனா்.