
பலத்த காற்றுடன் மழை: பவானியில் 20,000 வாழை மரங்கள் சேதம்
பவானி வட்டாரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் 25 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் சேதமாகின.

சேதமான வாழை மரங்களை வேதனையுடன் பாா்க்கும் விவசாயி.
பவானி வட்டாரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் 25 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் சேதமாகின.
பவானி, அம்மாபேட்டை பகுதியில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பவானி சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடைகள் முன்பு வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன; மரங்கள் முறிந்து விழுந்தன. ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால் பவானி நகா் மற்றும் புகா் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமாா் 5 மணி நேரத்துக்குப் பின்னா் கோனேரிபட்டி, தளவாய்பேட்டை துணை மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.
பவானி அருகே உள்ள ஜம்பை, வைரமங்கலம், போத்தநாயக்கனூா், சீதபாளையம், எரப்பநாயக்கன்பாளையம், தொட்டிபாளையம், மயிலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தும், உடைந்தும் சேதமடைந்தன. இதுகுறித்த தகவலின் பேரில் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சேதமடைந்த வாழைகள் குறித்து புதன்கிழமை கணக்கீட்டில் ஈடுபட்டனா். சேத மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பலத்த காற்றால் சேதமான வாழைகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







