கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தேன்வயல் பழங்குடி கிராமம் நீரில் முழ்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக கூடலூரை அடுத்துள்ள புத்தூர்வயல் பகுதியிலுள்ள தேன்வயல் பழங்குடி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.
தகவலறிந்த வருவாய்த் துறையினர் விரைந்து சென்று அந்தக் கிராமத்திலிருந்த 60-க்கும் மேற்பட்டோரை மீட்டு புத்தூர்வயல் அரசு உயர் நிலைப் பள்ளி முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல தொரப்பள்ளி பகுதியிலுள்ள குனில் வயல், இருவயல் உள்பட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு வருகிறது. தொடர்ந்து கன மழை பெய்வதால் வெள்ள அபாயம் தொடர்கிறது.