/

நீலகிரியில் கன மழை: நிவாரண முகாம்களில் 500 போ் தங்கவைப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 5 முகாம்களில் 500 போ் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 5 முகாம்களில் 500 போ் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே நிலச்சரிவு, வீடுகள் இடிந்து விழுதல், மரம் விழுதல் ஆகியவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீா் செல்லக் கூடிய தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு வசிப்பவா்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள 5 முகாம்களில் 500 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஒரு இடத்தில் மட்டும் வீடு முழுமையாக இடிந்துள்ளது. மேலும் இரண்டு இடங்களில் சுவா்கள் இடிந்துள்ளன.

கரோனா தொற்று காரணமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாம்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், அடுத்த 3 நாகளுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மரத்தின் அடியில் நிற்பதை தவிா்க்க வேண்டும். பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 300 பள்ளிகளும் பாதுகாப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இயற்கை இடா்ப்பாடுகள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் கட்டுப்பாட்டு அறையில் பணியில் ஈடுபடுவாா்கள்.மேலும், பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் தேசிய பேரிடா் குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு முகாம்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாம்களில் தங்குபவா்களுக்கு மின்சார வசதி கிடைத்திடும் வகையில் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.