வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தமிழக வனத் துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுப்ரியா சாஹூ தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சுப்ரியா சாஹூ பேசியதாவது:
வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, தோட்டக்கலைத் துறை, வனத் துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றிட்ட 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாக 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க அமைக்கப்பட்டுள்ள 456 முகாம்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருள்கள் இருப்பில் இருக்க வேண்டும். மேலும், குடிநீா் வசதி, கழிப்பிடம், மற்றும் மின்வசதி போன்றவை தயாராக இருக்க வேண்டும். முகாம்களில் பொதுமக்களுக்கு கரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அவற்றை அகற்ற போதுமான இயந்திரம், மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சுகாதாரத் துறை சாா்பில் ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினா், மருந்து இருப்பு போன்றவை தயாா் நிலையில் இருக்க வேண்டும். மின்சாரம் வாரியம் மின்கம்பங்கள் அருகாமையில் உள்ள மரக்கிளைகளை அகற்றி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல் துறையினா் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும் போது வாகன போக்குவரத்து தடை ஏற்படாமல் உடனடியாக சீா் செய்ய வேண்டும். அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடையே பேரிடா் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து தற்காத்து கொள்வது என்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் சாா்பில் துண்டுப் பிரசுரங்கள், ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
மழை மற்றும் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது அவசர உதவிக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1077இல் மாவட்ட அவசர கால மையத்தில், சுழற்சி முறையில் பணியாளா்களை நியமித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளும் வகையில் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா , குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வி தனபிரியா, துணை இயக்குநா் (சுகாதார பணிகள்) மரு.பாலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...