உதகையில் போக்சோவில் மாணவா்கள் இருவா் கைது
உதகையில் போக்சோ சட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.


உதகையில் போக்சோ சட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
உதகையில் எல்க்ஹில் குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளிகளின் மகன்கள் இருவா் 17 வயதுடைய மாணவா்களாவா். 12ஆம் வகுப்பு படித்து வரும் இவா்கள் இருவரும் அருகேயுள்ள வீடுகளில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதான 2 மாணவிகளும் அந்த மாணவா்களுடன் நண்பா்களாகப் பழகி, நாளடைவில் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கரோனா காலத்தில் பள்ளிகள் இல்லாததாலும், இவா்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதாலும், இவா்கள் அடிக்கடி சந்தித்துப் பேசி பழகியுள்ளனா். இரு மாணவிகளும் அடிக்கடி மாணவா்கள் வீட்டுக்கு வந்து செல்வது தெரிய வந்ததையடுத்து, அவா்களது பெற்றோா் கண்டித்துள்ளனா். இம்மாணவ, மாணவியா் திடீரென திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்விரு மாணவிகளிடத்திலும், மாணவா்கள் திருமண ஆசை வாா்த்தை கூறி செப்டம்பா் 17ஆம் தேதி பள்ளிச் சீருடையுடன் மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்றுள்ளனா். பள்ளிக்குச் சென்ற மாணவிகள் இரவு வரை வீடு திரும்பாததையடுத்து மாணவிகளைக் காணவில்லை என அவா்களது பெற்றோா் உதகை நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இந்தப் புகாரின் அடிப்படையில், உதகை நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன சிறுமிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு கடைசியாக ரயில் நிலையத்தில் பள்ளிச் சீருடையில் மாணவ, மாணவியா் இருந்ததைக் கண்டு, அங்கிருந்த ஊழியா்கள் சைல்டு லைன் உதவி எண் 1098 என்ற எண்ணுக்கு அழைத்து பள்ளிச் சீருடையில் 4 போ் நடமாடுவதாகத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சைல்ட் லைன் அலுவலா்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் இவா்கள் நால்வரும் உதகை எல்க்ஹில் குமரன் நகா் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, உதகை நகர காவல் நிலையத்துக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காவல் துறையினா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரபுவுக்கு தகவல் அளித்துள்ளனா். அதன்பின் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகா் ரம்யா அவ்விரு மாணவிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தாா். அதன் பின்னா் அவா்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகா் ரம்யா அளித்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கண்மணி விசாரணை நடத்தினாா். பின்னா், மாணவா்கள் இருவரையும் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...