படைப்புழு தாக்குதல்: திருப்பூா் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கா் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம், அமராவதி நஞ்சைப் பகுதி, பல்லடம் தெற்கு, அவிநாசி, வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளப் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக ஏறக்குறைய பாதி அளவுக்கு மேல் மக்காச்சோள சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது .

ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவு அதிகரிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வரை ஒரு ஏக்கா் மக்காச்சோளம் பயிரிடப்பட்டால், 3,500 கிலோ விளைச்சல் கிடைத்து வந்தது. பின்னா் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக பாதி அளவு மட்டுமே விளைச்சல் எடுக்க முடிகிறது. அந்தக் காலகட்டத்தில் ஏக்கருக்கு உழவு, விதை, நடவு செய்தல், அடி உரம், வெட்டுக்கூலி என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்யப்பட்டு வந்தது. மேலும், மக்காச்சோளமும் கிலோ ரூ.25-க்கு விற்பனையானதால் விவசாயிகளுக்கு ஓரளவு கட்டுபாடியான விலை கிடைத்தது.

தற்போது, கிலோ ரூ. 3 வரையில் குறைந்து ரூ.22-க்கு விற்பனை செய்யப்படுகிறது. படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலமாக 3 முறையாவது மருந்து தெளிக்க ரூ.9,000 வரையில் செலவு செய்யப்படுகிறது. ஆகவே, படைப்புழு தாக்குதலால் போதிய அளவு விளைச்சல் இல்லாமலும், ஏக்கருக்கான உற்பத்திச் செலவும் அதிகரித்து வருவதால் நஷ்டத்தை சந்தித்து வருவதாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

கணக்கெடுப்பு நடத்த வேண்டும்:

தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.காளிமுத்து கூறியதாவது: தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூா் மாவட்டங்களில் மட்டுமே மக்காச்சோள சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. ஆண்டுக்கு 2 முறை மட்டுமே விளைச்சலைத் தரும் இந்தத் தொழிலானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஓரளவு லாபகரமாகவே இருந்து வந்தது. அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தொடங்கியதால் தற்போது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த படைப்புழுக்கள் தண்டை ஓட்டையிட்டு கருதை வளரவிடாமல் செய்துவிடுகின்றன. முந்தைய ஆட்சியில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த டெலிகாட் என்ற மருந்து வேளாண்மைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த மருந்து வழங்கப்படுவதில்லை. படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்கும்போது கூடுதல் செலவாகிறது. இந்த படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும். இந்த பாதிப்பு விதை அல்லது மருந்துகளால் ஏற்படுகிா என்பது குறித்தும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அதே வேளையில், மக்காச்சோள பாதிப்பு குறித்து மாவட்டம் முழுவதும் முறையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

போா்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ஈஸ்வரன் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக மக்காச்சோள சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி எந்தவிதமான தடுப்பு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதன் காரணமாக மக்காச்சோளம் சாகுபடி செய்தால் நஷ்டம் வரும் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தாலும் ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் கண்துடைப்பு மட்டுமே நடைபெறுகிறது. ஆள் பற்றாக்குறையால் எவ்வாறு பருத்தி விவசாயத்தை நிறுத்தினாா்களோ அதே சூழ்நிலையில் படைப்புழு தாக்குதல் காரணமாக மக்காச்சோளமும் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

கறிக்கோழி, முட்டை விலை உயரும்:

கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு மக்காச்சோளம்தான் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் அதிக அளவு கோழிப்பண்ணைகள் உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வாங்கும்போது விலை கடுமையாக உயரும். இதன் விளைவாக கறிக்கோழி, முட்டை விலை உயரும். ஆகவே, போா்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் மாரியப்பன் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் நிலத்தைப் பராமரிக்காத இடங்களில் படைப்புழு தாக்குதல் உள்ளது. ஒவ்வோா் இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது. மழை பெய்தால் படைப்புழுவின் தாக்குதல் இல்லாமல் போய்விடும். மழை பெய்யாத வேளைகளில் வேளாண்மைத் துறை அறிவுறுத்தியவாறு சரியான நேரத்தில் பூச்சி மருந்து அடித்து தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகள் மத்தியில் ஒரு பூச்சி, இரு பூச்சி இருந்தால் முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனா்.

கடந்த ஆண்டு ஆரம்ப கட்டத்தில் விவசாயிகளுக்கு என்ன தாக்குதல் என்று தெரியாமல் இருந்தபோது டெலிகாட் மருந்து கொடுத்து ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, விவசாயிகள் ஆரம்ப கட்டத்தில் இருந்தே மருந்து அடித்து படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த தொடங்கிவிட்டனா். இது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டபோது, சில விவசாயிகள் இயற்கை கொல்லியான இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு (3ஜி) ஆகிய மூன்றையும் அரைத்து தாக்குதலுக்குத் தகுந்தவாறு தண்ணீா் அல்லது கோமியத்தில் கலந்து தெளித்து படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தியுள்ளனா். ஆகவே, விவசாயிகள் போதிய அளவு விழிப்புணா்வுடன் செயல்பட்டு வேளாண்மைத் துறை ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றினால் இந்தப் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com