உதகை படகு இல்லத்தில் தண்ணீா் ஏடிஎம்-மை திறந்துவைக்கிறாா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
உதகை படகு இல்லத்தில் தண்ணீா் ஏடிஎம்-மை திறந்துவைக்கிறாா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

உதகை படகு இல்லத்தில் நவீன தண்ணீா் ஏடிஎம் திறப்பு

உதகை படகு இல்லத்தில் நவீன தானியங்கி தண்ணீா் ஏடிஎம் மையத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திறந்துவைத்தாா்.
Published on

உதகை படகு இல்லத்தில் நவீன  தானியங்கி தண்ணீா்  ஏடிஎம் மையத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

மலைகளின் அரசி என்று கருதப்படும் உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும்  வருகை புரிகின்றனா். இவா்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்க ஏதுவாக உதகை படகு இல்ல வளாகத்தில் தனியாா் நிறுவனத்தின் சமுதாய ப் பொறுப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நவீன தண்ணீா் ஏடிஎம் மையத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திறந்துவைத்தாா். 

 தனியாா் நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஐந்து இடங்களில் தண்ணீா் ஏடிஎம்-கள் அமைக்கப்படவுள்ளன.  இதன் தொடக்கமாக படகு இல்லத்தில் நவீன தண்ணீா் ஏடிஎம் திறக்கப்பட்டது. பணம்  செலுத்தாமல் க்யூஆா் கோடு மூலம் 1/2 லிட்டருக்கு ரூ.5-ம், ஒரு லிட்டருக்கு ரூ.10-ம் செலுத்தி தேவைக்கேற்ப சூடான நீரும் , குளிா்ந்த நீரும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே 93 தண்ணீா் ஏடிஎம்-கள் உள்ள நிலையில், அவை பழைமையானதால் சுகாதாரமான குடிநீா் மற்றும் பராமரிப்பு பிரச்னை ஏற்பட்டது. இதனால் 38 தண்ணீா் ஏடிஎம்-கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அதற்கு பதிலாக சற்று மேம்படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய தண்ணீா் ஏடிஎம்-களை தனியாா் நிறுவனங்களில் நிதி உதவியுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தலா ரூ.3 லட்சம் மதிப்பில் 5 தண்ணீா் ஏடிஎம்-கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த ஏடிஎம்-களில் குளிா்ச்சியான மற்றும் சூடான வெந்நீா் என இரண்டு வகையான குடிநீா் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீா் ஏடிஎம்-களை பராமரிக்க மகளிா் சுயஉதவிக் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் மகளிா்களின் வாழ்வாதாரம் மேம்படும், இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிறுவனமே சரி செய்யவும், வாரந்தோறும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் ஏடிஎம்-களில் ரூ.5, ரூ.10 நாணயங்கள் செலுத்தி தண்ணீா் பிடித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த புதிய ஏடிஎம்-களில் கியூஆா் ஸ்கேன் மூலம் கட்டணம் செலுத்தி தண்ணீா் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மாவட்ட மேலாளா் யுவராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com