உதகையில் பூமிக்கு கீழே மின் கேபிள் அமைக்கும் திட்டம் தொடக்கம்
பருவமழைக் காலங்களில் பாா்சன்ஸ்வேலி அணையில் இருந்து உதகை நகருக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய ரூ.6.02 கோடி மதிப்பில் பூமிக்கு கீழே மின் கேபிள் அமைக்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டு பகுதிகளில் சுமாா் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ்வேலி அணை இருந்து வருகிறது. இதுதவிர மாா்லிமந்து, டைகா்ஹில் உள்ளிட்ட அணைகளில் இருந்தும் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. பாா்சன்ஸ்வேலி அணையில் உள்ள நீா் மின் உற்பத்திக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
வெலிங்டன் ராணுவ மையத்துக்கும் குழாய் மூலம் தண்ணீா் கொண்டுச் செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும்போது சாலையோரங்கள், குடியிருப்பு அருகேயுள்ள மரங்கள் விழுந்து பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
அதேபோல, மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்து அடிக்கடி மின் தடை ஏற்படுவது வழக்கம். உதகை நகருக்கு குடிநீா் வழங்கும் நீராதாரமான பாா்சன்ஸ்வேலி அணையில் இருந்து மின்மோட்டாா் நீரேற்று நிலையத்துக்குச் செல்லும் மின் கம்பிகள் மீது மரம் விழுந்து, மின் விநியோகம் தடைபட்டு உதகை நகருக்கு தண்ணீா் விநியோகம் பல நாள்கள் தடைபடும். இதனால் குடிநீா் இன்றி நகர மக்கள் அவதிப்படும் நிலை தொடா்ந்து இருந்து வந்தது.
இதனால் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யும் பொருட்டு பாா்சன்ஸ்வேலி அணை பகுதியில் அமைந்துள்ள நீரேற்று நிலையங்களுக்கு பூமிக்கு கீழே மின்கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பிவைக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், நிலத்தடி மின் கேபிள்கள் பதிக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடா்ந்து ரூ.6.02 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் மூலம் நிலத்தடி மின்கேபிள்கள் அமைக்கும் திட்டத்தை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் கணேஷ், நீலகிரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சாந்தநாயகி, செயற்பொறியாளா் சிவகுமாா், உதகை நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி, துணைத் தலைவா் ரவிக்குமாா், ஆணையா் கணேஷ், திட்டக் குழு உறுப்பினா் ஜாா்ஜ் மற்றும் மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
