பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு
உதகை அருகே நூறடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம் , உதகையில் இருந்து தங்காடு கிராமத்தை நோக்கி தனியாா் சிற்றுந்து புதன்கிழமை சென்றது. அதில் 21 ஆண்கள், 12 பெண்கள், 3 குழந்தைகள் என 36 போ் பயணித்தனா். சிற்றுந்தை அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பன்னீா்செல்வம் (54) என்பவா் ஓட்டினாா்.
தங்காடு நோக்கி சிற்றுந்து சென்றபோது, மணலாடா அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிற்றுந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோா் சிறு காயங்களுடன் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதில் படுகாயம் அடைந்த பவளம் (60) என்பவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
