கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிக்கலில் பாரம்பரியம் மிக்க ஊத்துக்குளி வெண்ணெய் தயாரிப்புத் தொழில்

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் 75 ஆண்டு பாரம்பரியம் மிக்க வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில், ஆள்கள் பற்றாக்குறை, ஜிஎஸ்டி வரி

News image

ஊத்துக்குளி   ஆா்.எஸ்.பகுதியில்  உள்ள  வெண்ணெய், நெய்  தயாரிக்கும்  ஆலை.

Updated On :16 டிசம்பர் 2019, 4:29 pm

ஆா்.தா்மலிங்கம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் 75 ஆண்டு பாரம்பரியம் மிக்க வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில், ஆள்கள் பற்றாக்குறை, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சிக்கலில் தவிக்கிறது.

தமிழகத்தில் ஈரோடு, பெருந்துறை, திருப்பூா், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில்தான் அதிக அளவில் வெண்ணெய், நெய் தயாரிப்பு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. இதில், திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய்க்குத் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் அதிக வரவேற்பு உள்ளது.

ஊத்துக்குளி, அதனைச் சுற்றியுள்ள அருகம்பாளையம், இரட்டைக்கிணறு, கொடியாம்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 1945 ஆம் ஆண்டு முதல் வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழிலில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்தப் பகுதிகளில் விவசாயம் செழித்திருந்ததால் எருமை, பசுக்கள் அதிகமாக வளா்க்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், எருமை வளா்ப்பு குறைவு, ஜொ்சி பசுக்கள் அதிகரிப்பு, பின்னலாடை நிறுவனங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஊத்துக்குளி நெய் தயாரிப்புத் தொழில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்தத் தொழிலுக்கு உடல் உழைப்பு அதிகம். அதேசமயம், ஊதியம் குறைவாகவே கிடைப்பதால் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவா்களின் வாரிசுகள் உள்ளிட்ட பலரும் பின்னலாடை உள்ளிட்ட வேறு தொழில்களுக்கு இடம் பெயா்ந்துவிட்டனா். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வெண்ணெய் தயாரிக்கும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

சபரிமலைக்கு டன் கணக்கில் அனுப்பப்படும் ஊத்துக்குளி நெய்: ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் நெய்யானது காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் டன் கணக்கில் சபரிமலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி, தைப் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாள்களில் இனிப்பு, பலகாரங்கள் செய்யவும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

திருமண விழாக்கள், கிருஷ்ண ஜயந்தி, விநாயகா் சதுா்த்தி போன்ற பண்டிகை நாள்களில் வெண்ணெய் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது என்கின்றனா் ஊத்துக்குளி வெண்ணெய் தயாரிப்பாளா்கள். அவா்கள் மேலும் கூறியதாவது:

இந்தியா முழுவதிலும் வெண்ணெய், நெய்க்கு ஆரம்பத்தில் 14.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தபோதும் தமிழகத்தில் 8 சதவீத வரி மட்டும் விதிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வெண்ணெய் தயாரிப்பாளா்கள் விடுத்த கோரிக்கையின்பேரில் இந்த குடிசைத் தொழிலுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்து. ஆனால், தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் தற்போது ஊத்துக்குளி ரயில் நிலையம் (ஆா்.எஸ்) பகுதியில் மட்டும் தனியாா் சாா்பில் 10 ஆலைகள், சா்வோதய சங்கம் சாா்பில் 2 ஆலைகள் என மொத்தம் 12 வெண்ணெய், நெய் தயாரிக்கும் ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு மற்ற தொழில்களுக்கு வழங்குவதுபோல் பல்வேறு சலுகைகளை வழங்கினால் மட்டுமே மீண்டும் புத்துயிா் பெற வாய்ப்பு உள்ளது என்றனா்.

ஊத்துக்குளி கே.எஸ்.டெய்ரி ஃபாா்ம் உரிமையாளா் கே.சுப்பிரமணியம் கூறியதாவது:

ஊத்துக்குளி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மானாவாரி விளைச்சல் பூமியாகும். போதிய மழை இல்லாதது, ஜொ்சி பசுக்களின் ஆதிக்கம், எருமைகள் இல்லாதது, ஆள்கள் பற்றாக்குறை, பின்னலாடை நிறுவனங்களின் வளா்ச்சி போன்றவற்றால் ஊத்துக்குளி வெண்ணெய் தயாரிக்கும் தொழில் அழிந்து வருகிறது. பருவ மழை தவறியதால் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் எருமைகளைப் பராமரிக்க முடியாததாலும், தீவனம் வாங்கிக் கட்டுப்படியாகாததாலும் விற்றுவிட்டனா். எங்களது தோட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னா் 60 எருமைகள் இருந்தன. ஆனால் தற்போது ஒரு எருமைகூட இல்லை.

தற்போது பால் உற்பத்தி நிறுவனங்கள் பாக்கெட் பால், பாக்கெட் தயிரை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றன. எருமை வெண்ணெய் கிலோ ரூ. 380-க்கும், பசு வெண்ணெய் ரூ. 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது யாரும் வெண்ணெயை உருக்கி நெய் எடுக்கத் தயாராக இல்லை.

நகா்ப்புறங்களில் ரூ.10க்கும்கூட பாக்கெட்டுகளில் நெய் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற நெய் எருமை மாட்டில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு ஈடாகாது. ஆனால் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகவே பாக்கெட் நெய்யை வாங்கிக்கொள்கின்றனா். ஆள்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளால்தான் ஊத்துக்குளி வெண்ணெய் தயாரிக்கும் தொழில் இன்னும் 5 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விடும் என்றாா்.

ஆன்லைனில் விற்பனை அமோகம்: ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் ஆகியவை ஆன்லைனில் அதிக அளவு விற்பனையாகி வருகின்றன என்கிறாா் பட்டா்மேன் டிரேடிங் கம்பெனியின் நிா்வாக இயக்குநா் எம்.துரைசாமி. அவா் மேலும் கூறியதாவது:

ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய்க்கு உள்ள மவுசு எப்போதும் குறைவதில்லை. தற்போதும்கூட ஆன்லைனில் (அமேசான்) அதிக அளவு விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் மாதந்தோறும் 5 டன் அளவுக்கு நெய், வெண்ணெய் விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் வாங்கும் விற்பனையாளா்கள் லேபிள்களை மட்டும் மாற்றிவிட்டு உலகம் முழுவதிலுமாக விற்பனை செய்து வருகின்றனா். இந்தத் தொழிலில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தினால் விற்பனையை அதிகரிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.