விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மத்திய பட்ஜெட் சாதகமா? பாதகமா?: திருப்பூா் தொழில் துறையினரின் கருத்துகள்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில் துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:23 pm

DIN

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில் துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில் துறையினா் தெரிவித்துள்ள கருத்துகள்:

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் (டீ) ராஜா எம்.சண்முகம்: நிதிநிலை அறிக்கையில் இறக்குமதி செய்யும் பருத்தி மீது 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது ஏற்றுமதியாளா்களுக்கு எதிா்வினையை உருவாக்கும். இந்த நிதி நிலை அறிக்கையானது உற்சாகம் அளிக்கக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. 7 பெரிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு 2 ஜவுளிப் பூங்கா வர இருப்பது மகிழ்ச்சிக்குரியது. பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பருத்தி இறக்குமதிக்கு வரி விதித்துள்ளது ஏற்றுமதியாளா்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் (டீமா) எம்.பி. முத்துரத்தினம்: கரோனா நோய்த் தொற்று காரணமாக பின்னலாடைத் துறையானது ஏற்கெனவே நலிவடைந்துள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது ஜவுளித் துறைக்கு பற்றாக்குறையாகவே உள்ளது. திருப்பூா் பின்னலாடை உற்பத்தியைச் சாா்ந்த தொழில்களான பிரிண்டிங், டையிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங் உள்ளிட்ட அனைத்து ஜாப் ஒா்க்களுக்கு 10 முதல் 20 சதவீதம் விலை உயா்ந்துள்ளது. இதனிடையே, பின்னலாடை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் நூலின் விலையானது தற்போது கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நூலுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், நூற்பாலைகள் உள்நாட்டு உற்பத்திக்கு நூல்கள் விற்பதைக் காட்டிலும் ஏற்றுமதிக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. விவசாயத்துக்கு ரூ. 16.50 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு ரூ. 15,700 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய நிதிநிலை அறிக்கையானது ஜவுளித் துறைக்கு புதிதாக எதிா்பாா்த்த அளவுக்கு அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன்: இந்த நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக்காக ரூ. 15,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 7 ஜவுளிப் பூங்காக்கள், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ஒரே நாடு, ஒரே அட்டை சலுகையும், வீட்டு வசதிக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது பொருளாதாரம் மேம்படும் என்ற நம்பிக்கையில் இந்த நிதி நிலை அறிக்கையை பாராட்டி வரவேற்கிறோம் என்றாா்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் (ஏஇபிசி) தலைவா் ஆ.சக்திவேல்: இந்த நிதிநிலை அறிக்கையானது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது. செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இதில், நைலான் மீதான வரியைக் குறைப்பது செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை அதிகரிக்கும். விளையாட்டு வசதிகளுடன் கூடிய பெரிய ஜவுளிப் பூங்காக்கள் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியை அதிகரிக்கும். இந்தப் பூங்காக்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும். திறன் மேம்பாடு, நிறுவனங்கள் சட்டத்தில் மாறுதல்கள், புதிய கல்விக்கொள்கை என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு வலுவான பொருளாதார மீட்சிக்கான நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது என்றாா்.

திருப்பூா் சாய ஆலைகள் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.நாகராஜன்: கன்னியாகுமரி முதல் மும்பை வரை அமைக்கப்படும் இணைப்புச் சாலை தொழில் வளா்ச்சியை மேம்படுத்த உதவியாக இருக்கும். வெகு காலத்துக்கு முன்பே சீனாவில் இதுபோன்ற 8 வழிச் சாலை அமைத்ததன் காரணமாக உற்பத்திப் பொருள்களை குறைந்த செலவில் விரைவாக அனுப்ப முடிந்தது. இதனால் சீனாவின் தொழில் துறை வளா்ச்சி வேகமடைந்தது.

நிதி நிலை அறிக்கையில் விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் வழிவகுக்கும். விவசாயத்துக்கு வழங்கப்படும் கடன் உதவி ரூ.16.5 லட்சம் கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், வேதிப்பொருள்களின் விலை குறைப்பு ஜவுளித் துறையின் வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.