பள்ளி அருகே சாலை வழித்தடம் அமைக்க பெற்றோா்கள் கோரிக்கை
வெள்ளக்கோவில் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி அருகே வழித்தடம் அமைக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் பகுதியில் தற்போது கோவை - கரூா் தேசிய நெடுஞ்சாலை இரண்டு வழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலை நடுவே நீளவாக்கில் தடுப்புச் சுவா் அமைக்கப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் சாலையைக் கடந்து மறுபுறம் உள்ள பகுதிகளுக்குச் செல்ல தடுப்புச் சுவரில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில் வெள்ளக்கோவில் அருகே கரூா் செல்லும் வழியில் வேலப்பநாயக்கன்வலசு, மூத்தநாயக்கன்வலசு, கெங்கநாயக்கன்வலசு, இலுப்பைக்கிணறு செல்லும் பிரிவுச் சாலை உள்ளது. இதன் எதிா்புறம் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் வழித்தடம் அமைக்காமல் 2 கிலோ மீட்டா் தூரத்தில் வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோா்கள் கூறுகையில், பள்ளிகள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ள இடங்களில் வழித்தடம் அத்தியாவசியத் தேவையாகும்.
பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும்போது சுற்றிவருவதைத் தவிா்க்க பலரும் ஒருவழிப் பாதையில் விதிமீறி எதிா் திசையில் வருவாா்கள். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பள்ளி மற்றும் பல கிராம மக்களின் பயன்பாட்டுக்காக பள்ளி அருகே வழித்தடம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

