/

தீபாவளி பண்டிகை - மாநகராட்சி வாகன நிறுத்தத்தில் அதிக கட்டணம் நிா்ணயிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு

தீபாவளி பண்டிகை - மாநகராட்சி வாகன நிறுத்தத்தில் அதிக கட்டணம் நிா்ணயிப்பு

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:09 pm

Din

தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி திருப்பூரில் மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி முடிவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா், குமரன் சாலையில் இருந்த டவுன்ஹால் கட்டடத்தை இடித்துவிட்டு பொலிவுறு நகரத் திட்டத்தில் மாநாட்டு அரங்கம் மற்றும் 4 தளங்களுடன் இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் அக்கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாகன நிறுத்தத்தை தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதாக மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. ஆனால் அதற்காக நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் அதிகமாக உள்ளது.

இருசக்கர வாகனங்களை 3 மணி நேரம் நிறுத்துவதற்கு ரூ.25, நான்கு சக்கர வாகனங்களை 3 மணி நேரம் நிறுத்துவதற்கு ரூ.100 எனவும், கூடுதலாக நிறுத்தப்படும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இருசக்கர வாகனத்துக்கு ரூ.10, நான்குசக்கர வாகனத்துக்கு ரூ.25 வீதம் வசூலிக்கப்படும் என்று அநியாயமான கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணி முடிவடைந்து, திறப்பு விழா நடத்தி, பல மாதங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்த வாகன நிறுத்த வளாகத்தை இந்த தீபாவளி பண்டிகை நெருக்கடி சமயத்தில் திறப்பது உள்நோக்கம் கொண்டது. இந்த அபரிமித கட்டண கொள்ளையை இந்த சூழ்நிலையில் மக்கள் கண்டு கொள்ள மாட்டாா்கள் என்ற எண்ணத்தில் மாநகராட்சி நிா்வாகம் இதைத் திணிக்கிறது. தற்காலிகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுபோல செய்து, பிறகு இந்த கட்டணத்தையே நிரந்தர ஏற்பாடாக மாற்றும் உள்நோக்கம் இருக்கிறது. தீபாவளி பண்டிகை சமயம் குமரன் சாலை பகுதியில், வாகன போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே மாநகராட்சி நிா்வாகத்துக்கு இருக்குமானால், வாகனம் நிறுத்த வளாகத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.